இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை, நேற்று இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் பேட்டிங், பவுலிங், ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.
இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் கே.எல். ராகுல் மூன்று இடங்கள் முன்னேறி ஆறாவது இடத்திற்கும், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஐந்து இடங்கள் முன்னேறி பத்தாவது இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளனர். ஆனால், இந்திய அணியின் ரோஹித் சர்மா ஒரு இடம் பின் தங்கி, 9ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டார். இந்த தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தானின் பாபர் ஆசம் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.