கோலி தலைமையிலான இந்திய அணி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இதன்மூலம், இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 0-2 என்ற கணக்கில் நியூசிலாந்திடம் ஒயிட்வாஷ் ஆனது.
இதனிடையே, இப்போட்டியின் இரண்டாம் ஆட்டநாளில் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சனின் விக்கெட்டை கோலி ஆக்ரோஷமாக கொண்டாடினார். இதுமட்டுமின்றி, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியபோது கோலி, நியூசிலாந்து ரசிகர்களை நோக்கியும் ஆவேசமாக கத்தினார்.
இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் தோல்வியடைந்த பிறகு கோலி பத்திரிகையாளர்களின் சந்திப்பில் பங்கேற்றார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர் இதுகுறித்து கோலியிடம்,
கேன் வில்லியம்சன் ஆட்டமிழந்தபோது அவரை நோக்கி ஆக்ரோஷமாக கூச்சலிட்டீர்கள். பின் நியூசிலாந்து ரசிகர்களிடமும் ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்டீர்கள். ஒரு கேப்டனாக களத்தில் ஆக்ரோஷத்தை குறைத்து அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கு எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதை நீங்கள் உணரவில்லையா? உங்களது இந்த நடத்தை குறித்து நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?என்ற கேள்வியை முன்வைத்தார்.