உலக கிரிக்கெட்டில் எப்போதும் ஒரு கேள்விக்கு மட்டும் தீர்வு கிடைக்கவே கிடைக்காது. அது யார் சிறந்த பேட்ஸ்மேன் என்ற கேள்விதான். சில நேரஙக்ளில் சச்சின், சில நேரங்களில் லாரா, சில நேரங்களில் காலிஸ், சில நேரங்களில் கோலி என அந்த பட்டியல் நீளும்.
அப்படி இந்த காலக்கட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் - கோலி ஆகியோரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்ற கேள்விக்கு ரசிகர்களிடையே இன்றும் விடைகிடைக்காத நிலைதான் உள்ளது. இதுகுறித்து ஸ்டீவ் ஸ்மித் பேசுகையில், ''விராட் கோலி ஒரு டெரிஃபிக்கான கிரிக்கெட்டர். அவர் அடித்த ரன்களே அவரின் மகத்துவத்தைத் தெரிவிக்கும். மூன்று ஃபார்மெட்டுகளிலும் ஒருவர் சிறந்த வீரராக இருப்பது அவ்வளவு சுலபமல்ல. அவர் மூன்று ஃபார்மெட்டுகளிலும் சிறப்பாக செயல்படுகிறார். இன்னும் அவர் பல சாதனைகளை முறியடிப்பதை நாம் பார்ப்போம்.
அவருடைய ரன்களுக்கான வேட்கை அவரை சிறப்பாக செயல்பட வைக்கிறது. ஒரு கேப்டனாக இந்திய அணியை டெஸ்ட் போட்டிகளில் நம்பர் 1 அணியாக மாற்றியுள்ளார். இந்திய கிரிக்கெட்டின் தரத்தை உயர்த்தியுள்ளார். இந்திய வீரர்களின் உடல்தகுதியும், கவனமும் கோலியால் மேம்பட்டுள்ளது.
உலகக்கோப்பைத் தொடரின்போது இங்கிலாந்து ரசிகர்கள் என்னை ரசிகர்களுக்கே உரிய பாணியில் கலாய்த்தனர். அப்போது விராட் கோலி எனக்கு ஆதரவளித்து, ரசிகர்களிடம் முறையிட்டார். அதனை அவர் செய்யவேண்டும் என்ற எந்த தேவையும் இல்லை. ஆனால் ஒரு சக கிரிக்கெட்டருக்காக ஆதரவளித்தார். எனக்கு அது பிடித்திருந்தது'' என்றார்.
டி20 உலகக்கோப்பை பற்றி...
இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. அதற்காக சிறப்பு பயிற்சியில் ஈடுபடவில்லை. ஆனால் டி20 போட்டிகளை அதிகமாக ஆடவேண்டும். அந்த எனர்ஜியை நம்முடன் வைத்துக்கொள்ளவேண்டும். உலகக்கோப்பை தொடர்களில் ஆடுவது எப்போதும் அலாதியானது. அதுவும் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. சொந்த மக்கள் முன் சொந்த மண்ணில் ஆடப்போகிறோம்.
2015ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடர் ஆஸ்திரேலியாவில்தான் நடந்தது. அந்த 6 வாரங்கள் என் வாழ்வின் சிறந்த நாட்கள். ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்தேன். அதனால் இந்த உலகக்கோப்பைத் தொடரினை அதிகமாக எதிர்பார்க்கிறேன்.