பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் அரசு முறை பயணமாக இந்தியா வரவுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், குஜராத்தின் அகமதாபாத்திலுள்ள மொடீரா கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைக்கவுள்ளார். ஒரு லட்சத்து 10 ஆயிரம் இருக்கைகளைக் கொண்ட உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமான இந்த மொடீரா மைதனத்திற்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன.
அகமதாபாத்தின் சபர்பதி என்ற பகுதியில் 800 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த மைதானத்தின் கட்டுமான பணி 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஒரே நேரத்தில் ஒரு லட்சம் பேர் அமர்ந்து கிரிக்கெட் போட்டியைப் பார்க்கக்கூடிய மெல்பர்ன் கிரிக்கெட் மைதனத்தைவிட, இந்த மைதானம் பெரியது. உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளுக்கு பயன்படுத்தப்பட்டுவந்த பழைய மொடீரா மைதானம் இடிக்கப்பட்டு, இந்த புதிய மைதானம் கட்டப்பட்டுள்ளது.
கருப்பு மற்றும் செம்மண் மூலம் உருவாக்கப்பட்ட 11 கிரிக்கெட் பிட்சுகள் இந்த மைதானத்தில் உள்ளன. இதேபோல, தூண்கள் இல்லாமல் இந்தியாவில் கட்டப்பட்ட முதல் கிரிக்கெட் மைதானம் இதுவாகும். இதன் மூலம் பார்வையாளர்கள் எந்தவொரு இடையூறும் இல்லாமல் போட்டியின் ஒவ்வொரு நொடியையும் கண்டுகளிக்கலாம்.
இந்த மைதானத்தில் தூண்கள் அமைத்து விளக்குகளைப் பொருத்துவதற்கு பதில், 90 மீட்டர் உயரத்தில் மைதான மேற்கூரையின் முகப்பில் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. நாட்டிலுள்ள வேறெந்த மைதானத்திலும் இல்லாத அளவுக்கு, இந்த மைதானத்தில் 75 கார்ப்பரேட் பாக்ஸ்கள் அமைக்கப்பட்டுள்ளன.