ஒரேயோரு ஆட்டத்தின்மூலம், இந்திய கிரிக்கெட் அணியில் தவிர்க்க முடியாத வீரராக வலம்வருகிறார் கே.எல். ராகுல். காயம் காரணமாக ரிஷப் பந்த் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலிருந்து விலகியதால் அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொண்ட கே.எல். ராகுல் பேட்டிங்கிலும், விக்கெட் கீப்பிங்கிலும் சிறப்பாக செயல்பட்டார். குறிப்பாக, பேட்டிங்கில் ஐந்தாவது வரிசையில் களமிறங்கிய அவர் 55 பந்துகளில் 80 ரன்கள் அடித்தும் அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இதைத்தொடர்ந்து, பெங்களூருவில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் காயம் காரணமாக ஷிகர் தவான் ஆட்டத்திலருந்து பாதியிலேயே வெளியேறினார். இதனால், கே.எல். ராகுல் ரோஹித் சர்மாவுடன் சேர்ந்து தொடக்க வீரராக களமிறங்கினார்.
இப்படி எந்த வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் என்றாலும் சரி, விக்கெட் கீப்பிங் செய்ய வேண்டும் என்றாலும் சரி அணியின் தேவைக்காக தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்திவருகிறார் கே.எல். ராகுல். விக்கெட் கீப்பிங் + பேட்டிங் இரண்டிலும் சிறப்பாக செயல்படுவதால் இவர் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் விக்கெட் கீப்பராக அணியில் தொடர்வார் என கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நாளை ஆக்லாந்தில் தொடங்கவுள்ள சூழலில், கே.எல். ராகுல் விக்கெட் கீப்பிங் பயிற்சி மேற்கொண்டார். நவ்தீப் சைனி, பும்ரா ஆகியோர் வலைபயிற்சியில் வீசும் பந்துகளை அவர் பிடித்துகொண்டிருந்தார். பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதன்மூலம், நாளைய போட்டியில் கே.எல்.ராகுல்தான் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என தெரிகிறது.
இதனால், ரிஷப் பந்த்தின் நிலைமை என்னவாகும் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. நாளைய போட்டியில் விக்கெட் கீப்பிங் பணியில் ரிஷப் பந்த் தொடர்வாரா அல்லது கே.எல். ராகுல் தொடர்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
முன்னதாக கே.எல். ராகுலை விக்கெட் கீப்பராக பயன்படுத்துவது குறித்து கோலி கூறுகையில் "2003ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரின்போது ராகுல் டிராவிட் விக்கெட் கீப்பராக செயல்பட்டதால் இந்திய அணிக்கு ஒரு பேட்ஸ்மேனை சேர்த்துக்கொள்ள முடிந்தது. அதேபோல்தான் கே.எல். ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட்டதால் ஒரு பேட்ஸ்மேன் சேர்த்துக்கொள்ளப்படுகிறார். இது இந்திய அணிக்கு சாதகத்தை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.
இதையும் படிங்க:2003இல் ராகுல் டிராவிட்... 2020இல் கேஎல் ராகுல்: கோலி சொல்லும் கணக்கு!