ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
சொதப்பிய பிரித்வி ஷா
இப்போட்டியில், இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய பிரித்வி ஷா இரண்டு இன்னிங்ஸிலும் தொடர்ச்சியாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
இந்திய அணியின் தோல்விக்கு இவரது ஆட்டமும் காரணம் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
ஷாவிற்கு பதில் ராகுல்
இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறுகையில், "ஆஸ்திரேலியா அணிக்கெதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இந்தியா இரண்டு மாற்றங்களை செய்ய வேண்டும்.
ஒன்று பிரித்வி ஷாவிற்கு பதிலாக கே.எல்.ராகுலை களமிறக்க வேண்டும். மற்றொன்று சுப்மன் கில்லை நடுவரிசை வீரராகத் தேர்வு செய்ய வேண்டும். ஏனெனில் பாக்ஸிங் டே டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி டெஸ்ட் தொடரை தக்க வைக்கும்.
அதனால் அணியில் இந்த மாற்றங்கள் நிச்சயம் இருக்க வேண்டும். மெல்போர்னில் ஆட்டம் நடைபெறவுள்ளதால், ராகுல் மற்றும் கில்லின் பங்களிப்பு சிறப்பு வாய்ந்ததாக அமையும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:பாக்ஸிங் டே டெஸ்ட்: ஆட்டநாயகனுக்கு கவுரவம்!