தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

#VijayHazare: அசத்திய கே.எல். ராகுல்... அரையிறுதியில் கர்நாடகா!

விஜய் ஹசாரே தொடரின் காலிறுதிப் போட்டியில் கர்நாடக அணி, புதுச்சேரியை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

kl-rahul

By

Published : Oct 21, 2019, 7:26 AM IST

2019ஆம் ஆண்டுக்கான விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் கர்நாடக அணி, புதுச்சேரி அணியை சந்தித்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற கர்நாடக அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த புதுச்சேரி அணி 15.1 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து, 41 ரன்களை மட்டும் எடுத்துத் தடுமாறியது.

இந்த நிலையில், விக்னேஷ்வரன் மாரிமுத்து (58), சாகார் திரிவேதி (54) ஆகியோரது பொறுப்பான ஆட்டத்தால் புதுச்சேரி அணி 50 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 207 ரன்களை எடுத்தது. கர்நாடக அணி தரப்பில் பிரவின் துபே மூன்று, அபிமன்யூ மிதுன், கவுசிக் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து, 208 ரன்கள் இலக்குடன் பேட்டிங் செய்த கர்நாடக அணி, 41 ஓவர்களிலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இப்போட்டியில் அபாரமாக பேட்டிங் செய்த கே.எல். ராகுல் 90 ரன்களில் ஆட்டமிழந்தார். அதில் எட்டு பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடங்கும். அதேபோல, தேவ்துட் படிக்கல், ரோகன் கதாம் ஆகியோர் தலா 50 ரன்கள் அடித்தனர்.

கர்நாடக அணி இப்போட்டியில் எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், இந்தத் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து நீக்கப்பட்ட இந்திய வீரர் கே.எல். ராகுல், இந்தத் தொடரில் தனது சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி வருகிறார். இந்தத் தொடரில் இதுவரை ஒரு சதம், மூன்று அரைசதம் என 458 ரன்களை எடுத்ததன் மூலம், மீண்டும் தேர்வுக் குழுவினரது கவனத்தை ஈர்த்து வருகிறார்.

ABOUT THE AUTHOR

...view details