இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி நேற்று (பிப்ரவரி 11ஆம் தேதி) நடைபெற்றது. இதில், இந்திய அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்தது.
இருப்பினும், இப்போட்டியில் ஐந்தாவது வரிசையில் களமிறங்கிய கே.எல். ராகுல் சிறப்பாக விளையாடி 112 பந்துகளில் 113 ரன்கள் விளாசினார். இதற்கு முன்னதாக ஐந்தாவது இடத்தில் களமிறங்கி முன்னாள் கேப்டன் தோனி இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதம் விளாசியிருந்தார்.
ஒருநாள் போட்டிகளில் இதுவரை 31 இன்னிங்ஸ்களில் ஆடியுள்ள ராகுல் நான்கு சதங்களை விளாசியிருக்கிறார். இதன்மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் வேகமாக சதம் விளாசிய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இவருக்கு முன்னதாக தொடக்க வீரர் ஷிகர் தவான் 24 இன்னிங்ஸ்களில் நான்கு சதங்கள் விளாசி முதலிடத்தில் உள்ளார்.
இந்திய விக்கெட்கீப்பர்களில் ஆசிய மண்ணுக்கு வெளியே நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் சதம் விளாசிய இரண்டாவது இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனயை கே.எல். ராகுல் படைத்துள்ளார். இவருக்கு முன்னதாக இந்திய பேட்டிங் லெஜண்ட் ராகுல் டிராவிட் 1999 உலகக் கோப்பை போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக 145 ரன்கள் எடுத்திருந்தார்.
இந்திய அணி நியூசிலாந்து ஒருநாள் தொடரை இழந்திருந்தாலும் இந்திய அணிக்குள் நீண்ட நாள்களாக இருந்துவந்த பிரச்னையான நான்காவது இடத்திற்கும், நன்றாக ஆடக்கூடிய ராகுலுக்கு இடமில்லாமல் இருந்த பிரச்னையும் தீர்ந்துள்ளது. இந்தத் தொடரில் ஐந்தாவது வீரராக மட்டுமே களமிறங்கிய ராகுல் ஒரு சதம், ஒரு அரைசதம் என அசத்தியுள்ளார். மறுபுறம் நான்காவது இடத்தில் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு சதம், இரண்டு அரைசதம் என அபாரமாக செயல்பட்டு நம்பிக்கையளித்துள்ளார். இந்த ஃபார்ம் தொடர்ந்தால் இந்திய அணியின் பேட்டிங் வரிசை மிகவும் பலம்வாய்ந்த வரிசையாக இருக்கும்.
இதையும் படிங்க: கடைசி 8 நிமிடங்களில் 4 கோல்கள்... டிராவில் முடிந்த நார்த் ஈஸ்ட் யுனைடெட் - ஜாம்ஷெத்பூர் ஆட்டம்!