2019-20ஆம் ஆண்டுக்கான பிக் பாஷ் டி20 தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவருகிறது. இன்றையப் போட்டியில் சிட்னி தண்டர்ஸ் அணியை எதிர்த்து பிரிஸ்பேன் ஹீட்ஸ் அணி விளையாடியது. இந்தப் போட்டி மழை காரணமாக 8 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. இதையடுத்து டாஸ் வென்ற பிரிஸ்மேன் ஹீட்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்வுசெய்தது.
தொடக்க வீரர்களாக டாம் பேண்டன் - கிறிஸ் லின் ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே பேண்டன் 6,4,4 என அடித்து டாப் கியரில் செல்ல, இரண்டாவது ஓவரை எதிர்கொண்ட லின் 4, 4,6,4 என தன் பங்கிற்கு வானவேடிக்கை காட்டினார்.
பின்னர் அர்ஜூன் நாயர் வீசிய மூன்றாவது ஓவரை எதிர்கொண்ட டாம் பேண்டன், 6 பந்துகளில் 5 சிக்சர்களை விளாசி 16 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். பின்னர் பேண்டன் 19 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து வெளியேற, தொடர்ந்து லின் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியாக பிரிஸ்மேன் ஹீட்ஸ் அணி 8 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய சிட்னி அணிக்கு தொடக்க வீரர் கவாஜா 11 ரன்களில் நடையைக் கட்டினார். இரண்டாவது ஓவரின் முடிவில் சிட்னி அணி 2.1 ஓவர்களுக்கு 22 ரன்கள் எடுத்திருந்தபோது, மீண்டும் மழை குறுக்கிட்டது.
சிறிது நேரத்துக்குப் பின் தொடங்கிய ஆட்டத்தில், சிட்னி சிக்சர்ஸ் அணி வெற்றிபெற 17 பந்துகளில் 55 ரன்கள் அடிக்கவேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் சிட்னி சிக்சர்ஸ் அணி 5 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 60 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பிரிஸ்மேன் ஹீட்ஸ் அணி டி/எல் விதிமுறைப்படி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
சிட்னி அணியில் அதிகபட்சமாக அலெக்ஸ் ஹேல்ஸ் 9 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் 16 பந்துகளில் 56 ரன்கள் விளாசிய டாம் பேண்டன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். ஐபிஎல் தொடரில் டாம் பேண்டன் கொல்கத்தா அணிக்காக ரூ.1 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிக் பாஷ்: ஒரே ஓவரில் 24 ரன்கள்... சிட்னி சிக்சர்ஸை வெற்றிபெறவைத்த ராஜஸ்தான் வீரர்