12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதியது.
இதில், டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் முதலில் பந்துவீச தீர்மானித்தார். அதன் படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 218 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக உத்தப்பா 67, நிதிஷ் ராணா 63, ரஸ்ஸல் 48 ரன்கள் எடுத்தனர்.
இதைத்தொடர்ந்து, 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பஞ்சாப் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கே.எல்.ராகுல் (1), கெயில் (20) என சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். இதனால், பஞ்சாப் அணி தொடக்கத்திலேயே கொல்கத்தா அணியிடம் சரணடைந்தது.
பின்னர் வந்த சர்ஃப்ராஸ் கான் 13 ரன்களில் வெளியேற, நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மயங்க் அகர்வால் - டேவிட் மில்லர் ஜோடி தங்களது அதிரடியான பேட்டிங்கை வெளிபடுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்த தருணத்தில் மயங்க் அகர்வால் 58 ரன்களில் அவுட் ஆனார். இதனால் பஞ்சாப் அணி 15.2 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 134 ரன்களை எடுத்தது.
பஞ்சாப் அணி வெற்றிபெற கடைசி 28 பந்துகளில் 84 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களத்தில் இருந்த டேவிட் மில்லர், மந்தீப் சிங் ஆகியோர் இந்த ரன்களை எடுக்க கடுமையாக முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் 28 பந்துகளில் 56 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 190 ரன்களை எடுத்தது. இதன் மூலம் கொல்கத்தா அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்தப் போட்டியில் வெற்றிபெற்றது.