இந்தூரில் இன்று நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி டி20 தொடரின் இறுதிப் போட்டியில் கர்நாடக அணி, மகாராஷ்டிரா அணியை எதிர்கொண்டது.இதில், டாஸ் வென்ற கர்நாடக அணியின் கேப்டன் மணிஷ் பாண்டே முதலில் பந்துவீச தீர்மானித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த மகாராஷ்டிரா 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நவ்ஷாத் 41 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 69 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்கமால் இருந்தார்.
இதைத்தொடர்ந்து, 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய கர்நாடக அணியில் ரோஹன் கதாம் மற்றும் சரத் பிஆர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், இவ்விரு வீரர்களும் முதல் விக்கெட்டுக்கு 14 ரன்களை சேர்த்த நிலையில், சரத் பிஆர் 2 ரன்களை நடையைக் கட்டினார்.
பின்னர், இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மயங்க் அகர்வால் மற்றும் ரோஹன் ஆகியோர் மகாராஷ்டிரா அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். இதில், அதிரடியாக விளையாடிய ரோஹன் 60 ரன்களில் ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரி, 3 சிக்சர்கள் அடங்கும்.
மறுமுனையில், நேர்த்தியான பேட்டிங்கை வெளிபடுத்திய மயங்க் அகர்வால் 57 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 85 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்தார். இதனால், கர்நாடக அணி 18.3 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்களை எடுத்தது.
இதன் மூலம், கர்நாடக அணி இந்தப் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சையத் முஷ்டாக் டி20 கோப்பையை முதல்முறையாக கைப்பற்றியது. கர்நாடக அணியின் வெற்றிக்கு துணையாக இருந்த மயங்க் அகர்வால் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.