விஜய் ஹசாரே கோப்பை உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று பெங்களூருவில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற கர்நாடக அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர் முரளி விஜய் ரன் ஏதுமின்றியும், அஸ்வின் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் பொறுப்புடன் விளையாடிய பினவ் முகுந்த் - பாபா அப்ரஜித் தமிழ்நாடு அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அந்த இணை மூன்றாவது விக்கெட்டுக்கு 124 ரன்களை சேர்த்தது. பின்னர் முகுந்த் 85, அப்ரஜித் 66 ரன்களிலும் வெளியேறினர். அடுத்து வந்த வீரர்களில் விஜய் சங்கர் 38, ஷாருக்கான் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் தினேஷ் கார்த்திக் 11 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இதனால் தமிழ்நாடு அணி 49.5 ஓவர்களில் 252 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இப்போட்டியில் தமிழ்நாடு அணியின் பேட்டிங்கின் போது 50ஆவது ஓவரை வீசிய கர்நாடக வேகப்பந்து வீச்சாளர் அபிமன்யு மிதுன் அந்த ஓவரின் மூன்று, நான்கு, ஐந்து ஆகிய பந்துகளில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் ஹாட்ரிக் சாதனைப் படைத்த அவர் விஜய் ஹசாரே தொடரில் ஹாட்ரிக் விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் கர்நாடக பவுலர் என்ற பெருமையையும், இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் இச்சாதனையை நிகழ்த்தும் முதல் வீரர் என்ற பெருமையையும் அடைந்தார்.
மொத்தமாக இப்போட்டியில் மிதுன், முரளி விஜய், விஜய் சங்கர் ஆகியோரின் விக்கெட்டுகளைக் கைப்பற்றி 34 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார். லிஸ்ட் ஏ கிரிக்கெட் தொடரில் ஐந்து விக்கெட்டுகளை மிதுன் கைப்பற்றுவது இதுவே முதன்முறையாகும். இதில் மற்றமொரு ஸ்பெஷல் என்னவென்றால் அபிமன்யு மிதுன் இச்சாதனையை தனது 30ஆவது பிறந்தநாளில் (அக்டோபர் 25) இன்று நிகழ்த்தியிருக்கிறார்.
அதன் பின் சேஸிங்கை தொடங்கிய கர்நாடக அணி 23 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் இந்த இறுதிப் போட்டி விஜெடி என்னும் விதியின் அடிப்படையில் கர்நாடக அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் அந்த அணி விஜய் ஹசாரே தொடரில் நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.