இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், இந்திய மகளிர் அணியின் தலைமை பயிற்சியாளர் W.V.ராமனுடனான நேரலை நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அப்போது பேசிய டிராவிட், தனது ஓய்விற்கு பின் இந்திய ஏ அணியின் பயிற்சியாளராக மாற முன்னாள் கேப்டன் கபில் தேவ்வின் ஆலோசனைகள் பெரிதும் உதவியதாக தெரிவித்தார்.
அவர் மேலும் பேசுகையில், 'நான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, எனக்கு சில விருப்பங்கள் இருந்தன. ஆனால் அப்போது நான் என்ன செய்வதென்று தெரியவில்லை. இதுகுறித்து நான் கபில் தேவ்விடம் ஆலோசனை கேட்டேன். அவர் தான் தன்னை பயிற்சியாளராக மாற ஆலோசனை வழங்கினர்.
மேலும் அவர் என்னிடம், 'ராகுல், உடனடியாக எதையும் செய்ய உறுதியளிக்க வேண்டாம். வெளியே சென்று சில வருடங்கள் செலவழித்து, வெவ்வேறு விஷயங்களை ஆராய்ந்து அதன் பின் முடிவை எடுங்கள்' என்று கூறினார். அவரின் இந்த ஆலோசனை மிகச்சிறந்ததாக எனக்கு தோன்றியது.
நான் முதலில் கிரிக்கெட் வர்ணனையாளராக மாறவே முடிவெடுத்தேன். ஆனால் அது சிறிது காலத்திலேயே தனக்கு சலிப்பை உருவாக்கியது. அந்த நேரத்தில் இந்திய ஏ மற்றும் 19 வயதுக்குட்பட்ட இளையோர் அணிகளின் தலைமை பயிற்சியாளர் பதவி காலியாக இருந்தது. அதன்பிறகு கபில் தேவ்வின் ஆலோசனை படி எனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டேன்' என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஒலிம்பிக் தொடருக்கான ஹாக்கி அட்டவணை: முதல் போட்டியில் நியூசி.யை எதிர்கொள்ளும் இந்தியா!