இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், இந்தியாவிற்கு முதல் முறை உலகக்கோப்பையைப் பெற்று தந்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் கபில் தேவ். நேற்று முன்தினம் (அக்.23) நெஞ்சு வலி காரணமாக டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கபில் தேவ்விற்கு, ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சையளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பல்வேறு துறை சார்ந்த பிரபலங்களும், கிரிக்கெட் வீரர்களும் கபில் தேவ் விரைவில் குணமடைய வேண்டும் என வாழ்த்து தெரிவித்திருந்தனர். இதற்கிடையில் கபில் தேவ் நலமுடன் இருக்கிறேன் என்று கூறுவது போன்ற புகைப்படம் வெளியாகி அனைவருக்கும் நம்பிக்கையளித்தது.
இந்நிலையில், இன்று (அக்.25) கபில் தேவ் மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை இந்திய அணியின் முன்னாள் வீரர் சேட்டன் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
சேட்டன் சர்மாவின் ட்விட்டர் பதிவில், ‘மருத்துவர் அதுல் மாத்தூர், கபில் தேவ்விற்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையை செய்தார். இதனால் தற்போது அவர் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார். இது கபில் தேவ் வீடு திரும்பும் போது மருத்துவமனையில் எடுக்கப்பட்ட புகைப்படம்’ என பதிவிட்டுள்ளார்.
கிரிக்கெட் உலகில் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவரான கபில் தேவ் 131 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 5,131 ரன்களையும், 225 ஒருநாள் போட்டிகளில் 3,783 ரன்களையும் குவித்துள்ளார். அதேசமயம் ஒரு நாள் போட்டியில் 253 விக்கெட்டுகளையும், டெஸ்ட் போட்டியில் 434 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
மேலும் டெஸ்ட் போட்டிகளில் 434 விக்கெட்டுகளையும், 5 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்த ஒரே வீரர் எனும் சாதனையை கபில் தேவ் தன்வசம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பரபரப்பான ஆட்டத்தில் ஹைதராபாத்தை வீழ்த்தி பஞ்சாப் அசத்தல் வெற்றி!