இந்திய மகளிர் கிரிக்கெட்டின் 'யங் சென்சேஷன்' ஷஃபாலி வர்மா. இதுவரை இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டிற்கு கிடைக்காத அளவிற்கு, இந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டிற்கு வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு கிரிக்கெட்டின் வளர்ச்சி என்பதைக் கடந்து, இந்திய மகளிர் வீராங்கனைகளின் வளர்ச்சியால் தான், இது சாத்தியமாகியுள்ளது. மிதாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி, ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கவுர் என சூப்பர் ஸ்டார்கள் பலர் இருந்தாலும், உலகக்கோப்பைத் தொடரில் களம் புகுந்த 16 வயதேயாகும் ராக் ஸ்டார் ஷஃபாலி வர்மாவின் ஆட்டம், சர்வதேச ரசிகர்களை மகளிர் கிரிக்கெட்டின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
மகளிர் கிரிக்கெட்டின் ரசிகர்கள் ஷஃபாலி வர்மாவால் அதிகமாவார்கள் என கேப்டன் ஹர்மன் கூறியிருந்தார். இது முற்றிலும் உண்மை. மக்கள் கிரிக்கெட் பார்ப்பதற்கு முதன்மையான காரணம், அதில் கிடைக்கும் பரபரப்புக்காக தான். அந்தப் பரபரப்பு தான் இன்று வரை, ரசிகர்களைக் கட்டிப்போட்டுள்ளது. அந்தப் பரபரப்பு ஒவ்வொரு பந்திற்கும் ஷஃபாலி வர்மாவால் கொடுக்க முடிகிறது.
ஆடவர் கிரிக்கெட்டில் கிடைக்கும் அதே பரபரப்பு மகளிர் கிரிக்கெட்டிலும் இருக்கிறது என அனைவருக்கும் தெரியப்படுத்தியது தான், இந்த டி20 உலகக்கோப்பைக்கு கிடைத்த முதல் வெற்றி. இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் இறுதிப்போட்டிக்கான டிக்கெட்டுகள் பெரும்பாலும் விற்பனையாகிவிட்டது.
நாளை நடக்கவுள்ள இறுதிப்போட்டியில் இந்திய அணி வென்றால், 1983ஆம் ஆண்டு கபில் தேவ் உலகக்கோப்பையைக் கைப்பற்றிய நிமிடங்களை மீண்டும் உருவாக்கலாம். அதற்கு ஷஃபாலி வர்மா சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு, இந்திய அணி தகுதி பெற 15 வீராங்கனைகள், உடன்சென்ற பிசிசிஐ அலுவலர்கள், பயிற்சியாளர்கள் என அனைவருமே முக்கியக் காரணம் தான். ஆனால், ரசிகர்களை ஈர்த்ததில் பெரும்பங்கு ஷஃபாலிக்கே உள்ளது.
அந்த ஷஃபாலியின் பயணத்தைப் பற்றி பார்க்கலாம்...
விளையாட்டு வீராங்கனைகள் தலை முடியை வெட்டுவது சாதாரண விஷயம் தான். ஆனால் ஷஃபாலி வர்மா, தனது தலை முடியை வெட்டியதற்குப் பின்னால் ஆச்சர்யமூட்டும் கதை ஒளிந்திருக்கிறது. 2013ஆம் ஆண்டு ரஞ்சி டிராபி தொடரில் சச்சின் டெண்டுல்கர், தனது கடைசி ரஞ்சி டிராபி போட்டியில் ஆடினார்.
அதற்காக ஹரியானாவின் லாலி பகுதியிலிருந்து, தனது தந்தையுடன் சச்சினைப் பார்க்க வந்துள்ளார் ஷஃபாலி. அங்கே தொடங்கியது ஷஃபாலியின் கிரிக்கெட் ஆசை. அப்போது அவருக்கு வயது 10.
இதையும் படிங்க:நாத்திகர்களுக்கும் பிடித்த கடவுள் 'சச்சின் டெண்டுல்கர்!'
அதையடுத்து சின்னச்சின்ன கிரிக்கெட் பயிற்சிகள். ஒவ்வொரு பயிற்சி தொடங்கும்போதும் ஷஃபாலியின் அப்பா கூறுவது, யார் பந்து வீசினாலும் அச்சமின்றி ஆடவேண்டும் என்பதுதான். அதனாலேயே அச்சமின்றி அதிரடியில் கலக்கியுள்ளார்.
திடீரென ஒருநாள் தனது அண்ணன் காய்ச்சலால் படுக்க, அவர் ஆடவேண்டிய கிரிக்கெட் போட்டியில் பாய் கட் (Boy Hair-Cut) செய்துவிட்டு ஷாஃபாலியை, அவரது அப்பா களமிறக்குகிறார். ஷஃபாலியும் எந்த பந்துவீச்சாளரையும் கண்டு மிரளாமல் அடித்து துவம்சம் செய்கிறார்.
எந்த அளவிற்கு என்றால், அந்தத் தொடரின் இறுதியில் ஆட்டநாயகன் விருதினை வாங்கும் அளவிற்கு மிரட்டுகிறார். 10 வயதாகும் சிறுமி ஒருவர், ஆடவர் கிரிக்கெட் தொடரில் தொடர் நாயகன் விருது வாங்கியது உள்ளூரில் மட்டுமல்லாமல் தேசிய அளவிலும் செய்தியாகியது.
அங்கே தொடங்கிய ஷஃபாலியின் பயணம், ரோட்டக்கில் உள்ள ஸ்ரீராம் நரைன் கிரிக்கெட் அகாதமியை நோக்கி பயணிக்கிறது. மகளிர் கிரிக்கெட்டர்கள் யாரும் இல்லாததால் ஆடவர் கிரிக்கெட்டர்களுடன் பயிற்சி செய்ய வேண்டிய நிலை வந்தபோதும், ஷஃபாலி அசரவில்லை. பயிற்சியைத் தொடர்ந்தார்.
ஹரியானா ஆடவர் அணிக்காக ஆடிய ஆஷிஷ் ஹூடா, மணிக்கு 135 கி.மீ., வேகத்தில் பந்துவீசுபவர். ஆனால் ஷஃபாலியோ அவரையும் விட்டுவைக்கவில்லை. ஒவ்வொரு முறை பேட் (pad) கட்டி களத்தில் இறங்கும்போதும், தனது அப்பா சொன்னதை மட்டுமே நினைவில் வைத்துக்கொண்டு அனைவரையும் அச்சமின்றி எதிர்கொண்டார்.
அதன் விளைவு ஹரியானாவின் ஜூனியர் அணியில் இடம்கிடைக்கிறது. அங்கே பவுண்டரிகளாகவும், சிக்சர்களாகவும் வெளுத்து வாங்க, சீனியர் அணிக்கு அதிரடியாக மாற்றப்படுகிறார். அதையடுத்து சீனியர் அணியான நாகலாந்தை ஹரியானா எதிர்கொள்கிறது.
அந்தப் போட்டியில் 56 பந்துகளுக்கு 128 ரன்களை அடிக்கிறார். எங்கும் எதற்காகவும் தனது பாணியை மாற்றாமல், ரன்களை சேர்க்கிறார். அதையடுத்து நடந்த யு-23 வீராங்கனைகளுக்கான தொடரில், ஹரியானா அணியில் ஆடிய ஷஃபாலி, 6 போட்டிகளில் 463 ரன்கள் சேர்த்தது அனைவரையும் பிரமிக்க வைத்தது.