டெஸ்ட் கிரிக்கெட் என்றாலே, ஸ்லிப் திசையில் இருக்கும் வீரர்களுக்குதான் வேலை அதிகமாக இருக்கும். ஏனெனில், போட்டியின்போது அந்த திசையில்தான் கேட்ச் அதிகம் வரும். இதனால்தான், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்லிப் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. பெரும்பாலும், அவர்கள் இருக்கும் இடத்தில்தான் கேட்ச் வரும். ஒருநாள், டி20 போட்டி போல பயங்கரமாக டைவ் அடித்து கேட்ச் பிடிக்க வேண்டிய சூழல் ஏற்படாது.
ஒருவேளை, மற்ற ஃபீல்டிங் திசையில் இருக்கும் வீரர்கள் டைவ் அடித்து பிடிக்கும் கேட்ச்கள், ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கும். சில சமயங்களில் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய கேட்சாகவும் அது இருக்கும்.
அந்தவகையில், லார்ட்ஸில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில், இங்கிலாந்து வீரர் ஜோ டென்லி, ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் மெக்ராத் ஸ்டைலில் மாஸான கேட்ச்சை பிடித்துள்ளார்.
மெக்ராத் கேட்ச் ரீவைண்ட்:
2002 ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி அடிலெயிட் மைதானத்தில் நடைபெற்றது. இதில், இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாகன் அடித்த ஷாட்டை, ஸ்கோயர் லெக் திசையில் இருந்த மெக்ராத், ஓடி சென்று தனது இடதுபக்கம் டைவ் அடித்து கேட்ச் பிடித்தார். இதனால், மைக்கேல் வாகன் 41 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
மெக்ராத்தின் இந்த கேட்ச் ஆட்டத்தின் போக்கை முற்றிலும் மாற்றியது. இறுதியில் ஆஸ்திரேலிய அணி அந்த போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஆஷஸ் டெஸ்ட் தொடரில் மெக்ராத்தின் இந்த கேட்ச் ஸ்பெஷலான கேட்ச்சாக பார்க்கப்பட்டது.
ஜோ டென்லியின் கேட்ச்:
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியின் கடைசிநாள் நேற்று நடைபெற்றது. இதில், 50 ஓவர்கள் மட்டுமே இருந்த நிலையில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு 267 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி 40.5 ஓவர்களில் 149 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்திருந்தது.
இந்நிலையில், ஆர்ச்சர் வீசிய அந்த ஓவரின் கடைசி பந்தை, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் எதிர்கொண்டார். அவர் அடித்த புல் ஷாட்டை, ஷார்ட் ஸ்கோயர் லெக் திசையில் ஃபீல்டிங் செய்திருந்த ஜோ டென்லி, மெக்ராத் போலவே தனது இடதுப்பக்கம் டைவ் அடித்து கேட்ச் பிடித்தார். இதனால், ஆஸ்திரேலிய அணி ஆறு விக்கெட்டுகளை இழந்ததோடு மட்டுமின்றி, ஆட்டத்தின் போக்கும் இங்கிலாந்து அணியின் பக்கம் திரும்பியது.
இறுதியில், ஆஸ்திரேலிய அணி 47.3 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்களை எடுத்திருந்தால் ஆட்டம் டிராவில் முடிந்தது. இருப்பினும், ஆட்டத்தை சுவாரஸ்யமாக்கிய ஜோ டென்லியின் வாவ் கேட்ச் சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.