தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஜான்டியால் பறப்பார்களா இந்திய வீரர்கள்?

இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் பதவிக்காக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் விண்ணப்பித்துள்ளார்.

ஜான்டியால் பறப்பார்களா இந்திய வீரர்கள் ?

By

Published : Jul 25, 2019, 7:41 PM IST

Updated : Jul 25, 2019, 9:49 PM IST

கிரிக்கெட்டில் ஃபீல்டிங் என்று சொன்னாலே, தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸின் பெயர்தான் நினைவுக்கு வரும். ஜான்டி என்றால் ஃபீல்டிங், ஃபீல்டிங் என்றால் ஜான்டி இவ்விரண்டையும் பிரிக்க முடியாது. அந்த அளவிற்கு ஃபீல்டிங்கிற்கு முக்கியத்துவம் தந்தவர். பல போட்டிகளில் தனது சிறப்பான ஃபீல்டிங்கினால் அணியை வெற்றிபெற வைத்தவர். பாயின்ட் திசையில் இவர் ஃபீல்டிங் நின்றால் சச்சினேக்கூட அந்த திசையில் ஷாட் விளையாட பயப்படுவார் என்பது நிதர்சனம்.

இவரது வருகைக்கு பிறகுதான், போட்டியில் வெற்றிபெற ஃபீல்டிங்கும் முக்கியம் என்பது தெரியவந்தது. தற்போது ஃபீல்டிங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு இவர் முன்னோடி. 1992இல் பாகிஸ்தான் வீரர் இன்சமாம் -உல்-ஹக்கை ரன் அவுட் செய்ததை, கிரிக்கெட் அவ்வளவு எளிதாக மறந்துவிடாது. அதுமட்டுமல்லாமல் சப்ஸ்டிட்யூட் வீரராக களமிறங்கி ஒரே போட்டியில் ஐந்து கேட்சுகளை பிடித்து, ஆட்டநாயகன் விருதை வென்ற ஒரே வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

சிறந்த ரன் அவுட்

ஜான்டி ரோட்ஸின் சமகாலத்தில் இந்திய வீரர் யுவராஜ் சிங், முகமது ஃகைப் ஆகியோர் ஃபீல்டிங்கில் அசத்தினர். அப்போது, யுவராஜ் சிங் இந்தியாவின் ஜான்டி ரோட்ஸ் என 90ஸ் கிட்ஸ் ரசிகர்களால் அழைக்கப்பட்டார். தற்போது இந்திய அணியில், ஜடேஜா, கோலி, ஹர்திக் பாண்டியா ஆகியோர் சிறப்பாக ஃபீல்டிங் செய்தாலும், இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக ஜான்டி ரோட்ஸ் இருக்கமாட்டாரா என்ற ஏக்கம் ரசிகர்களுக்கு நீண்ட நாட்களாகவே இருந்தது. ஏனெனில் அதற்கு முக்கிய காரணம், ஜான்டியால் அசாத்தியமும் சாத்தியமாகும்.

இவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு தென்னாப்பிரிக்க அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக செயல்பட்டார். பின்னர், ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒன்பது வருடங்களாக மும்பை இந்தியன்ஸ் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராகவும் இருந்து பல ஃபீல்டர்களை உருவாக்கினார்.

ஃபீல்டிங்கில் கோலி

உலகக்கோப்பை தொடர் முடிவடைந்ததையடுத்து, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர், பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் பயிற்சியாளர் பதவிகளுக்கு தகுதியானவர்கள் ஜூலை 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என பிசிசிஐ அறிவித்திருந்தது. தற்போது இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக விளங்கும் ஆர்.ஸ்ரீதரின் பதவிக்காலம் வெஸ்ட் இண்டீஸ் தொடரோடு முடிய உள்ளது.

இந்நிலையில், இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு ஜான்டி ரோட்ஸ் விண்ணப்பித்துள்ளார். அதுமட்டுமில்லாது, இவரை தேர்வு செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. ரசிகர்கள் நீண்ட வருடங்களுக்கு முன் எதிர்பார்த்ததை போல, இவர் ஃபீல்டிங் பயிற்சியாளராக வலம் வந்தால், இனி இந்திய வீரர்களும் இறக்கை இல்லாமல் பறப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Last Updated : Jul 25, 2019, 9:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details