தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

85 ஆண்டுகால ரஞ்சி கோப்பை வரலாற்றில் சரித்திர சாதனைப் படைத்த ஜார்கண்ட்! - ஃபாலோ ஆன் பெற்றப் பின் போட்டியில் வெற்றிபெற்ற ஜார்க்கண்ட்

திரிபுரா அணிக்கு எதிரான போட்டி மூலம், ஃபாலோ ஆன் பெற்ற பிறகு ரஞ்சி கோப்பை வரலாற்றில் வெற்றிபெற்ற முதல் அணி என்ற சாதனையை ஜார்கண்ட் அணி படைத்துள்ளது.

jharkhand team
jharkhand team

By

Published : Dec 16, 2019, 11:14 PM IST

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஃபாலோ ஆன் பெற்ற பின்னரும் ஒரு அணி வெற்றிபெறுவது என்பது அரிதிலும் அரிதாக நடக்கக்கூடிய சம்பவங்களாகும். இதுவரை 2000-த்திற்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றாலும், மூன்று முறை மட்டுமே ஃபாலோ ஆன் பெற்ற அணி வெற்றிபெற்றுள்ளது. அவை மூன்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத்தான் இந்த வெற்றி கிடைத்தது என்பது வேறுகதை.

முதலில் 1894, 1981இல் இங்கிலாந்து அணியும் பின் 2001இல் இந்திய அணி என இவ்விரண்டு அணிதான் ஃபாலோ ஆன் பெற்ற நிலையில் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று சரித்திரம் படைத்தனர். தற்போது ஃபாலோ ஆன் பெற்ற பின் போட்டியில் வெற்றிபெற முடியும் என்ற ஃபார்முலா ரஞ்சி கிரிக்கெட் தொடரிலும் தொடங்கியுள்ளது. நடப்பு சீசனுக்கான ரஞ்சி கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றுப்போட்டிகள் முடிந்த நிலையில் நாளை இரண்டாம் சுற்றுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதனிடையே, டிசம்பர் 9 முதல் 12ஆம் தேதி வரை அகர்தலாவில் நடைபெற்ற குரூப் சி பிரிவுக்கான போட்டியில் ஜார்கண்ட் - திரிபுரா அணிகள் மோதின. இதில், முதலில் பேட்டிங் செய்த திரிபுரா அணி முதல் இன்னிங்சில் 289 ரன்கள் எடுத்த நிலையில், ஜார்கண்ட் அணி தனது முதல் இன்னிங்சில் 136 ரன்களுக்கே சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக விராட் சிங் 47 ரன்கள் எடுத்தார். திரிபுரா அணி சார்பில் ரானா துட்டா நான்கு, அபிஜித் சர்கார் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து, 153 ரன்கள் ஃபாலோ ஆன் பெற்று தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய ஜார்ண்ட் அணி 108 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 418 ரன்களைச் சேர்த்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக ஜார்கண்ட் அணியின் கேப்டன் சவுரப் திவாரி 122, இஷாந்த் ஜகி 107 ரன்கள் அடித்தனர்.

இதையடுத்து, 265 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய திரிபுரா அணி 64.4 ஓவர்களில் 211 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததால், ஜார்கண்ட் அணி இப்போட்டியில் 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ஜார்கண்ட் அணி தரப்பில் ஆசிஷ் குமார் ஐந்து, விவேகானந்த் திவாரி மூன்று விக்கெட்டுகளை எடுத்தனர்.

இதன்மூலம், 85 ஆண்டுகால ரஞ்சிக்கோப்பை வரலாற்றில் ஃபாலோ ஆன் பெற்றபின் வெற்றிபெற்ற முதல் அணி என்ற சரித்திர சாதனையை ஜார்கண்ட் அணி படைத்துள்ளது. அந்த அணியின் இச்சாதனையை பார்க்கும்போது 2001 கொல்கத்தா டெஸ்ட் போட்டி நினைவுக்கு வந்ததாக சமூக வலைதளவாசிகள் கருத்துத் தெரிவித்தனர். இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள குரூப் சி பிரிவுக்கான இரண்டாம் போட்டியில் ஜார்கண்ட் அணி அஸ்ஸாம் அணியுடன் மோதவுள்ளது.

இதையும் படிங்க:டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் பிங்க் பால் மேட்ச்!

ABOUT THE AUTHOR

...view details