பிசிசிஐ செயலாளராக இருப்பவர், மத்திய உள்துறை அமைச்சர், பாஜகவின் மூத்த தலைவருமான அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா. இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தலைமையின் கீழ் பிசிசிஐயின் செயலாளராக செயல்பட்டு வருகிறார் ஜெய் ஷா.
கங்குலி நெஞ்சுவலி காரணமாக கொல்கத்தாவில் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டு தொடர்களான சையத் முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே தொடர்களை நடத்துவதிலும் ஜெய் ஷா முழு தீவிரமாக செயல்பட்டுவருகிறார்.
இந்நிலையில், 24 உறுப்பு நாடுகளை கொண்ட ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருந்த வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நஸ்முல் ஹுசைனின் பதவிக்காலம் முடிவடைந்தையொட்டி, புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று காணொளி கூட்டரங்கு மூலம் நடைபெற்றது. இதில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா போட்டியின்றி ஒருமனதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து பிசிசிஐ பொருளாளர் அருண் சிங் துமல் தனது ட்விட்டர் பதிவில், “ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள் ஜெய் ஷா. உங்கள் தலைமையின் கீழ் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிறைய சாதனைகளை செய்வதுடன், ஆசிய பிராந்தியத்தை சேர்ந்த அனைத்து கிரிக்கெட் வீரர்களும் பயனடைவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஐஎஸ்எல்: மும்பை சிட்டிக்கு 'ஷாக்' கொடுத்த நார்த் ஈஸ்ட் !