வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 297 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் அணி 222 ரன்களும் எடுத்தன. இதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது. பின்னர் நான்காம் நாள் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே கேப்டன் விராட் கோலி 51 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் ரஹானே - விஹாரி இணை ஜோடி சேர்ந்தது. இந்த இரு வீரர்களும் இந்திய அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தத் தொடங்கினர்.
இளம் வீரர் விஹாரியின் சிறப்பான ஆட்டத்தில் தனது இரண்டாவது அரைசதத்தைப் பதிவு செய்தார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய ரஹானே, டெஸ்ட் போட்டிகளில் தனது 10ஆவது சதத்தைப் பதிவு செய்து அசத்தினார். அதையடுத்து இந்த இணை அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டது.
ரஹானே 102 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த ரிஷப் பந்த் ஏழு ரன்களில் வெளியேறினார். பின்னர் சிறப்பாக ஆடிய விஹாரி 93 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணி ஏழு விக்கெட்டுகள் இழப்பிற்கு 343 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற 419 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
அதையடுத்து, களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. கிரைக் பிராத்வெயிட் ஒரு ரன்னிலும், கேம்ப்பெல் ஏழு ரன்களிலும், ப்ரூக்ஸ் இரண்டு ரன்களிலும், ஹெட்மயர் ஒரு ரன்களிலும், டேரன் பிராவோ இரண்டு ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேற வெஸ்ட் இண்டீஸ் அணி 15 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
விக்கெட் வீழ்த்திய கொண்டாட்டத்தில் பும்ரா அதையடுத்து களமிறங்கிய வீரர்களில் கீமார் ரோட் மட்டும் அதிரடியாக ஆடி 38 ரன்களை எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 26ஆவது ஓவரின் ஐந்தாவது பந்தில் 100 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி சார்பாக பும்ரா 5, இஷாந்த் ஷர்மா 3 , ஷமி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். மேலும் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளது. இப்போட்டியின் ஆட்டநாயகனாக சதம் விளாசிய ரஹானே தேர்வு செய்யப்பட்டார்.
இஷாந்த் ஷர்மா விக்கெட் வீழ்த்தியபோது... இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்த வெற்றியுடன் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.