இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று டி20 போட்டிகள் கொண்ட கடைசி போட்டி புனேவில் நேற்று நடைபெற்றது. இதில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது.
இதனிடையே இப்போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான பும்ரா ஒரு விக்கெட் எடுத்திருந்தார். இதன்மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் சாஹல், அஸ்வினை முறியடித்து 53 விக்கெட்டுகளுடன் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இலங்கை அணியின் தொடக்க வீரரான தனுஷ்கா குனதிலகாவை அவர் அவுட் செய்ததன் மூலம் இச்சாதனையை அவர் எட்டினார். இந்திய அணிக்காக இதுவரை 45 டி20 போட்டிகளில் விளையாடிய அவர் 53 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். காயம் காரணமாக நீண்ட நாட்களுக்கு பின் பும்ரா இந்தத் தொடரில்தான் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியல்
- பும்ரா - 53 விக்கெட்டுகள் (45 போட்டிகள்)
- சாஹல் - 52 விக்கெட்டுகள் (37 போட்டிகள்)
- அஸ்வின் - 52 விக்கெட்டுகள் (47 போட்டிகள்)
- புவனேஷ்வர் குமார் - 41 விக்கெட்டுகள் (43 போட்டிகள்)
- குல்தீப் யாதவ் - 39 விக்கெட்டுகள்
இதையும் படிங்க:தோனி விரைவில் ஓய்வை அறிவிப்பார்: ரவி சாஸ்திரி!