சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தங்களது மகளிர் மேம்பாட்டு நடுவர்களின் பட்டியலை நேற்று வெளியிட்டது. இப்பட்டியலில் இந்தியாவின் நடுவர்களான விருந்தா ரதி, ஜெனனி நாராயணன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், ஐசிசி இப்பணிக்களுக்கான தேடலை பல்வேறு நாடுகளில் நடத்தி இறுதியாக இந்தியாவிலிருந்து இருவரைத் தேர்வுசெய்துள்ளது. அதேபோல், மற்றொரு இந்தியரான ஜி.எஸ். லக்ஷ்மியை சர்வதேச போட்டிகளின் நடுவர் பட்டியலிலும் இணைத்துள்ளது.
இவர்கள் ஐசிசியின் முக்கியத் தொடர்களான 19 வயதுக்குள்பட்டோர் உலகக்கோப்பை, மகளிர் டி20 உலகக்கோப்பை, ஒரு சில தகுதிச்சுற்றுப் போட்டிகளில் பணியாற்றவுள்ளார்கள் என்றும் ஐசிசி தெரிவித்துள்ளது.
இது குறித்து ஜெனனி கூறுகையில், "இந்த வாய்ப்பானது எனக்கு கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். எனது திறமைக்கு ஏற்றவாறு எவ்வாறு செயல்பட வேண்டுமென நான் சிந்தித்துவைத்துள்ளேன். நான் கிரிக்கெட்டை மிகவும் விரும்புபவள், அதனால் இப்பணியில் சிறப்பாகச் செயல்படுவேன் என நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து ரதி கூறுகையில், "ஐசிசியின் இந்த அறிவிப்பானது எனக்கு கிடைத்த மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது. இப்பணியின் மூலம் நான் நிறைய கற்றுக் கொள்வேன். அதேசமயம் எனது எதிர்கால பணிகள் குறித்தும் யோசிக்க இது எனக்கு வழிவகுக்கும் என நம்புகிறேன்" என்றார்.
இதையும் படிங்க:பாகிஸ்தானுடன் தொடங்கி பாகிஸ்தானுடனே முடிந்த சச்சினின் ஒருநாள் கிரிக்கெட் பயணம்!