19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிகளுக்கான ஐசிசி யு19 உலகக்கோப்பை தொடர் அண்மையில் தென் ஆப்பிரிக்காவில் நடந்து முடிந்தது. இந்தத் தொடரில் இறுதிப் போட்டியில் வங்கதேச அணியிடம் வீழ்ந்த இந்திய அணி இரண்டாம் இடம் பிடித்தது. எனினும் இந்தத் தொடரில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் அசத்திய இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஷ்வால் தொடரின் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
உடைந்த உலகக்கோப்பை நாயகனின் விருது - yashashwi jaiswal trophy
யு19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நாயகனாக தேர்வான இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஷ்வாலுக்கு வழங்கப்பட்ட கோப்பை உடைந்ததாக, அவரது பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை தொடரில் ஆறு போட்டிகளில், நான்கு அரைசதம், ஒரு சதம் என 400 ரன்கள் குவித்த யஷஸ்வி ஜெய்ஷ்வால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இறுதிப்போட்டியிலும் தனி ஆளாக போராடிய அவர், 88 ரன்கள் குவித்தார்.
இதனிடையே யஷஸ்வி ஜெய்ஷ்வாலுக்கு வழங்கப்பட்ட தொடர் நாயகன் விருது பயணத்தின்போது இரண்டாக உடைந்ததாகவும்; பின்னர் அது சரி செய்யப்பட்டதாகவும் ஜெய்ஷ்வாலின் பயிற்சியாளர் தெரிவித்தார். மேலும், அவர் ஜெய்ஷ்வால் கோப்பை உடைந்தது குறித்து வருந்தவில்லை என்றும், எப்போதும் ரன்கள் குறித்து மட்டுமே அவரது எண்ணம் இருக்கும் என்றும் தெரிவித்தார்.