இந்தியாவின் ஐபிஎல் தொடரைப் பின்பற்றி இலங்கை கிரிக்கெட் வாரியம், அந்நாட்டில் லங்கா பிரீமியர் லீக் (எல்பிஎல்) என்ற உள்ளூர் டி20 தொடரை இந்தாண்டு முதல் தொடங்கியது. நவம்பர் 21ஆம் தேதிமுதல் நடைபெற்றுவந்த இத்தொடரின் லீக் ஆட்டங்கள் நிறைவடைந்து, நேற்று (டிச. 16) இறுதிப் போட்டி நடைபெற்றது.
இத்தொடரின் இறுதிப் போட்டியில் திசாரா பெரேரா தலைமையிலான ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ் அணி, பானுக ராஜபக்ச தலைமையிலான கலே கிளாடியேட்டர்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
தொடக்கம் முதலே அதிரடி
அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் அவிஷ்கா ஃபெர்னாண்டோ - சார்லஸ் இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். இதன்மூலம் ஆறு ஓவர்கள் முடிவில் ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 51 ரன்களை எடுத்தது.
அதன்பின் 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஃபெர்னாண்டோ ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து சார்லஸும் 26 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். இதையடுத்து களமிறங்கிய அசலங்கா 10 ரன்களில் சண்டகனிடம் விக்கெட்டை இழந்தார்.
அதிரடியில் மிரட்டிய சோயிப் மாலிக்
பின்னர் ஜோடி சேர்ந்த சோயிப் மாலிக் - டி சில்வா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த மாலிக் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 46 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ் அணி ஆறு விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களைக் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சோயிப் மாலிக் 46 ரன்களையும், திசாரா பெரேரா 39 ரன்களையும் எடுத்தனர்.