தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

விதர்பா அணியின் பயிற்சியாளராகிறார் வாசிம் ஜாஃபர்? - பயிற்சியாளாராகிறார் வாசிம் ஜாஃபர்

விதர்பா அணியின் பயிற்சியாளராகச் செயல்பட்டுவந்த சந்திரகாந்த் பண்டிட் பதவி விலகியதையடுத்து, அந்தப் பதவிக்கு முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் நியமிக்கப்படுவார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

jaffer-may-take-over-as-vidarbha-coach-after-pandits-exit
jaffer-may-take-over-as-vidarbha-coach-after-pandits-exit

By

Published : Mar 27, 2020, 8:23 AM IST

இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர். இவர் சர்வதேச அளவில் பெரிதாக சோபிக்கவில்லை என்றாலும், உள்ளூர் தொடர்களில் ஜாம்பவான் வீரராக வலம்வந்தார். ரஞ்சி டிராபி போட்டிகளில் 12 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார். பின்னர் இந்தாண்டு முடிவடைந்த ரஞ்சி டிராபி தொடரோடு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார்.

ரஞ்சி டிராபி போட்டிகளில் மும்பை அணிக்காக ஆடிவந்த வாசிம் ஜாஃபர், விதர்பா கிரிக்கெட் சங்கத்தின் கோரிக்கையால் இளம் வீரர்களை வழிநடத்த விதர்பா அணிக்காக மூன்று ஆண்டுகள் ஆடினார். இவரால் விதர்பா அணி அடுத்தடுத்து இரு ரஞ்சி டிராபி சாம்பியன்ஷிப்பைக் கைப்பற்றியது.

அந்த வெற்றிக்கு வாசிம் ஜாஃபர், பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் ஆகியோர் முக்கியக் காரணமாகப் பார்க்கப்பட்டனர். இந்நிலையில் மூன்று ஆண்டுகளாக விதர்பா அணியின் பயிற்சியாளராக இருந்த சந்திரகாந்த் பண்டிட் நேற்று பதவி விலகினார். மத்தியப் பிரதேச அணிக்குப் பயிற்சியாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனால் விதர்பா அணியின் பயிற்சியாளராக யார் வருவார் என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து விசாரிக்கையில் விதர்பா அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் பயிற்சியாளராக நியமிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

பின்னர் வாசிம் ஜாஃபரிடம் பேசுகையில், 'பயிற்சியாளர் பதவிக்காக இதுவரை என்னை யாரும் அணுகவில்லை. யாராவது அணுகினால் நிச்சயம் அதைப்பற்றி யோசிப்பேன்' என்றார்.

இதைப்பற்றி விதர்பா கிரிக்கெட் சங்கத் தலைவர் ஆனந்த் ஜெய்ஷ்வால் கூறுகையில், "பயிற்சியாளர் பதவி யாருக்கு என்பது பற்றி இதுவரை முடிவுசெய்யப்படவில்லை. யாரை அணுகியுள்ளோம் என்பது பற்றி என்னால் கூற முடியாது.

இது தொடர்பாக கிரிக்கெட் முன்னேற்றக் குழு, நிர்வாகிகள் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொள்ள வேண்டியுள்ளது. கரோனா வைரஸ் காரணமாக பல ஆலோசனைக் கூட்டங்களை நடத்த முடியாமல் உள்ளது. இந்த நிலைமை சீரானதும் பயிற்சியாளர் யார் என்பது தெரியவரும்" என்றார்.

விதர்பா அணி வீரர்களுடன் வாசிம் ஜாஃபருக்கு நல்ல புரிதல் ஏற்கனவே உள்ளதால் அவர் பயிற்சியாளராக வருவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

இதையும் படிங்க:24 ஆண்டுகள் கிரிக்கெட்டுக்கு விடைகொடுத்த 'ரஞ்சி ஜாம்பவான்' வாசிம் ஜாஃபர்!

ABOUT THE AUTHOR

...view details