இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸின் போது இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா, மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்தில் காயமடைந்தார்.
இதனையடுத்து களத்திற்கு வந்த மருத்துவர்கள் ஜடேஜாவை சோதித்து, அவரை ஸ்கேன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனால் ஜடேஜா இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீச முடியாமல் போனது.
இந்நிலையில் ஜடேஜாவின் இடதுகை கட்டைவிரலில் பலத்தகாயம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, அவர் ஆஸ்திரேலியுடான மீதமுள்ள டெஸ்ட் போட்டியில் விளையாடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஜடேஜா கட்டாயம் ஆறு வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டியது அவசியம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அடுத்த மாதம் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணியுடனான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஜடேஜா பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “காயம் காரணமாக இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா கட்டாயம் 6 வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டியது அவசியம் என மருத்துவர்கள் கூறியதைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணியுடனான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஜடேஜா பங்கேற்க மாட்டார்.
மேலும் ஆஸ்திரேலிய அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தவிர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பட்சத்தில், ஜடேஜா பேட்டிங் செய்ய அனுமதிக்கப்படுவார்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: எஃப்.ஏ.கோப்பை: நியூகேஸிலை வீழ்த்தியது அர்செனல்!