கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த அணியான தென் ஆப்பிரிக்க அணி கடந்த சில ஆண்டுகளாக மோசமான ஃபார்மில் உள்ளது. குறிப்பாக, இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரிலும் அந்த அணி அரையிறுதிச் சுற்றுக்குகூட முன்னேற முடியாமல் படுதோல்வி அடைந்தது.இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட், மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
இதனிடையே, சரிவிலிருந்த தென் ஆப்பிரிக்க அணியை மீட்டெடுக்கும் முயற்சியில் அந்த அணி வாரியம் பல அதிரடி முடிவுகளை மேற்கொண்டது. முதலில், தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித்தை இடைக்கால இயக்குநராகவும், மார்க் பவுச்சரை அணியின் பயிற்சியாளராகவும் நியமித்து அசத்தியது. இதனால், தென் ஆப்பிரிக்க அணி மீண்டும் பழைய வின்னிங் ஃபார்முக்குத் திரும்பும் என நம்பிக்கை ரசிகர்களுக்கு தோன்றியது.
தற்போது அந்த நம்பிக்கையை மேலும் அதிகரிக்கச் செய்யும் வகையில், கிரிக்கெட்டின் சிறந்த ஆல்ரவுண்டரான தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான ஜாக் காலிஸ், அந்த அணியின் பேட்டிங் ஆலோசகராக நியக்கப்பட்டுள்ளார். பேட்டிங்கில் ஜாக் காலிஸ் செய்த மேஜிக் அனைவருக்கும் தெரிந்த விஷயமே. அவர் களமிறங்கினாலே, எந்த ஒரு அதிரடியான ஆட்டம் இல்லாமலே ஸ்கோர் அதிகரித்துக்கொண்டே இருக்கும். தற்போது அவர் பேட்டிங் ஆலோசகராக நியமிக்கப்பட்டதால், தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கில் சிறந்து விளங்கும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.