பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கரார்ச்சியில் நடைபெற்றது. இதில், முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 191 ரன்கள் எடுக்க, இலங்கை அணி 271 ரன்களைச் சேர்த்தது.
சதம் அடித்த பாகிஸ்தான் வீரர்கள் ஷான் மசூத், அபித் அலி, அசார் அலி, பாபர் அசாம் இதையடுத்து, 80 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 131 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 555 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பாபர் அசாம் 100 ரன்களுடனும், முகமது ரிஸ்வான் 21 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ஷான் மசூத் 135, அபித் அலி 174, அசார் அலி 118, பாபர் அசாம் 100 ஆகிய நால்வரும் சதம் அடித்தனர்.
சதம் அடித்த வாசிம் ஜாஃபர், தினேஷ் கார்த்திக், டிராவிட், சச்சின் இதன் மூலம் இந்தியாவுக்கு அடுத்து டெஸ்ட் போட்டி வரலாற்றில் ஒரு அணியில் முதல் நான்கு வீரர்களும் சதம் அடித்து சாதனைப் படைப்பது இது இரண்டாவது முறையாகும். 2007இல் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய தினேஷ் கார்த்திக் 129, வாசிம் ஜாஃபர் 138, டிராவிட் 129, சச்சின் 122 ரன்கள் எடுத்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து, இப்போட்டியில் 476 ரன்கள் இலக்குடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய வரும் இலங்கை அணி 60.1 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகள் இழந்து 212 எடுத்தபோது நான்காம் ஆட்டநாள் முடிவுக்கு வந்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் நசீம் ஷா மூன்று விக்கெட்டுகள் எடுக்க, ஹரிஸ் சோஹைல், ஷஹீன் அஃப்ரிடி, முகமது அபாஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
இதையும் படிங்க:கங்குலி மீண்டும் அழைக்கப்பட்டிருந்தால் அது பாகிஸ்தானின் சிறந்த வெற்றியாக மாறியிருக்காது - சேப்பாக் டெஸ்ட் ரீவைண்ட்