இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதன்மை பந்துவீச்சாளராகத் திகழும் இஷாந்த் சர்மாவுக்கு கடந்த ஜனவரி மாதம் ரஞ்சி தொடரின்போது கணுக்காளில் காயம் ஏற்பட்டது. இந்த காயத்திலிருந்து மீண்டுவர அவருக்கு ஆறு வாரங்களாகும் என டெல்லி அணியின் பிசியோதெரபிஸ்ட் தெரிவித்திருந்தார்.
இதனால், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலிருந்து அவர் விலகுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பெங்களூருவில் அமைந்துள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமியில் சிகிச்சைப் பெற்று பூரண குணமான இஷாந்த் சர்மா, உடற்தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்று, இந்திய அணியில் இடம்பிடித்தார்.
இதைத்தொடர்ந்து, வெலிங்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இருப்பினும், இந்திய அணிக்கு இப்போட்டியில் அமைந்த சாதகமான விஷயமே இஷாந்த் சர்மா, ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றியதுதான்.
இந்நிலையில், இஷாந்த் சர்மாவுக்கு மீண்டும் கணுக்காளில் காயம் ஏற்பட்டதால் நியூசிலாந்துக்கு எதிராக கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகினார். இதனால், அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டார்.