தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஸாம்பா சுழலில் சிக்குகிறாரா கோலி?

ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் கோலியை அதிகமுறை அவுட் செய்த சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஆடம் ஸாம்பா பெற்றுள்ளார்.

Is Virat Kohli Adam Zampa's bunny?
Is Virat Kohli Adam Zampa's bunny?

By

Published : Jan 19, 2020, 7:21 AM IST

தனது சிறப்பான பேட்டிங்கால் பல்வேறு சாதனைகளைப் படைத்து சர்வதேச கிரிக்கெட்டில் தனி ராஜ்ஜியம் நடத்திவருபவர் இந்திய அணியின் கேப்டன் கோலி. ஒருநாள், டெஸ்ட், டி20 என அனைத்துவிதமான ஃபார்மெட்டுகளிலும் ஆவரேஜ் 50க்கும் மேல் வைத்திருக்கும் ஒரே பேட்ஸ்மேனான இவரை விரைவில் அவுட் செய்ய வேண்டும் என்பதே எதிரணிகளின் கனவாக இருக்கும்.

கோலியை அவுட் செய்த மகிழ்ச்சியில் ஸாம்பா

அந்தக் கனவை ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஸாம்பா நனவாக்கியுள்ளார். கோலி போன்ற சிறந்த வீரர்களுக்கு அட்டாக்கிங் மனநிலையில் பந்து வீசினால் மட்டுமே அவர்களின் விக்கெட்டை வீழ்த்த முடியும் என அவர் தெரிவித்திருந்தார். அதே யூக்தியை அவர் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்றுவரும் ஒருநாள் தொடரிலும் பயன்படுத்திவருகிறார்.

முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் கோலி, ஸாம்பாவின் லெக் ஸ்பின்னை அட்டாக் செய்து ஆடினாலும் இறுதியில் அவரிடமே தனது விக்கெட்டையும் இழந்தார். மும்பையில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 18 ரன்களில், ஸாம்பாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டான கோலி, பின் ராஜ்கோட்டில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் ஸாம்பாவின் பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு விளையாடினார்.

கோலி

ஆனால், அவரது கடைசி ஓவரை அடித்தாட வேண்டும் என நினைத்த கோலி 78 ரன்களில் லாங் ஆஃப் திசையில் மிட்சல் ஸ்டார்க்கிடம் கேட்ச் தந்து ஆட்டமிழந்தார். ஒருநாள் போட்டிகளில் கோலியின் விக்கெட்டை ஸாம்பா வீழ்த்துவது ஐந்தாவது முறை இதுவாகும். இதன்மூலம், ஒருநாள் போட்டிகளில் கோலியை அதிகமுறை அவுட் செய்த சுழற்பந்துவீச்சாளர் இலங்கையின் சுராஜ் ரன்டிவின் சாதனயையை ஸாம்பா முறியடித்துள்ளார்.

இதுமட்டுமின்றி, ஒட்டுமொத்தமாக கோலியை அதிக முறை அவுட் செய்த பந்துவீச்சாளர்களின் வரிசையில் ஸாம்பா இலங்கையின் திசாரா பெரேரா, நியூசிலாந்தின் டிம் சவுதி ஆகியோருடன் இரண்டாவது இடத்தைப் பகிர்ந்துகொண்டார்.

கோலி

மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றிபெற்ற நிலையில், தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசிப் போட்டி இன்று பெங்களூருவில் நடைபெறவுள்ளது. இதிலும் கோலியின் விக்கெட்டை ஸாம்பா வீழ்த்தி அவரிடம் வெற்றிபெறுவாரா அல்லது ஸாம்பாவின் சுழலிலிருந்து கோலி தப்பிப்பாரா என்ற எதிர்பார்ப்பு கோலியின் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

ஒருநாள் போட்டிகளில் கோலியை அதிகமுறை அவுட் செய்த பந்துவீச்சாளர்கள்:

  1. ரவி ராம்பால் (வெஸ்ட் இண்டீஸ்) - 6 முறை
  2. திசாரா பெரேரா (இலங்கை), ஆடம் ஸாம்பா(ஆஸ்திரேலியா), டிம் சவுதி (நியூசிலாந்து) - 5 முறை
  3. ஜேசன் ஹோல்டர் (வெஸ்ட் இண்டீஸ்), சுராஜ் ரன்டிவ் (இலங்கை), ஜெ ரிச்சர்ட்சன் (ஆஸ்திரேலியா) - 4 முறை

ஒருநாள் போட்டியைத் தவிர்த்து ஸாம்பா கோலியை டி20 போட்டிகளிலும் இரண்டுமுறை அவுட் செய்துள்ளார். இதன் மூலம், அனைத்துவிதமான போட்டிகளிலும் கோலியை அதிக முறை அவுட் செய்த பந்துவீச்சாளர்களின் வரிசையில் அவர் மோர்னே மோர்கல், நாதன் லயன், டிம் சவுதி ரவி ராம்பால் ஆகியோருடன் ஸாம்பா இரண்டாவது இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். இங்கிலாந்தின் ஆண்டர்சன், கிரேம் ஸ்வான் ஆகியோர் கோலியை தலா எட்டு முறை அவுட் செய்து இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க:ஹர்பஜன் சிங் சாதனையை முறியடித்த குல்தீப் யாதவ்

ABOUT THE AUTHOR

...view details