சர்வதேச கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் பிசிசிஐ பொன்முட்டை இடும் வாத்து. இந்திய அணி எந்த நாட்டிற்கு பயணம் சென்று கிரிக்கெட் ஆடினாலும், அங்கே அதிகமான ரசிகர்கள் இருப்பார்கள். ஐசிசியின் வருமானத்தில் பிசிசிஐயின் பங்கு 30 சதவீதத்திற்கும் மேல். மற்ற நாட்டு கிரிக்கெட் நிர்வாகங்கள் எல்லாம் 15 சதவீதத்தையே தொடாத நிலையில், பிசிசிஐ 30 சதவீதத்தை பங்காக கொடுத்துவருகிறது.
இவையனைத்தும் இந்திய கிரிக்கெட் வீரர்களின் சிறப்பான செயல்பாடுகளால் மட்டும்தான் சாத்தியமாகிறது. நியூசிலாந்து தொடருக்கு முன்னதாக இந்திய கேப்டன் விராட் கோலி நியூசிலாந்து தொடருக்கான அட்டவணையைப் பற்றிய அதிருப்தியில் பிசிசிஐயை குற்றம் சாட்டியிருந்தார். ஒவ்வொரு போட்டிக்கும் ஒருநாள் முன்னதாக மைதானத்தில் களமிறங்கி உடனடியாக போட்டியில் பங்கேற்கிறோம் என்று தோன்றுவதாகக் கூறியது சர்ச்சையாகியது.
ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று முடிந்த நிலையில், அடுத்த நாளே விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்திற்கு பயணம் மேற்கொண்டது.
கடந்த 10 ஆண்டுகளில் எந்தத் தொடரை எடுத்துக்கொண்டாலும் இந்திய அணி குறைந்தது அரையிறுதி வரை தகுதிபெற்றிருக்கிறோம். இந்திய அணி அளவிற்கு வேறு அணிகளால் வெற்றிகளையும் பெற முடியவில்லை. ஆனால் இந்திய வீரர்களின் உடல்நிலையிலும் ஆரோக்கியத்திலும் பிசிசிஐ கவனம் செலுத்தியுள்ளதா என்பதைப் பார்த்தால், சிறிது கேள்வி எழத்தான் செய்கிறது.
2019-20 ஆண்டில் இந்திய அணியின் பயணம்:
- ஐபிஎல் தொடர் : மார்ச் 23 முதல் மே 12 வரை
- ஐசிசி உலகக்கோப்பைத் தொடர்: மே 30 முதல் ஜூலை 14 வரை
- இந்திய அணியின் வெஸ்ட் இண்டீஸ் பயணம் : ஆகஸ்ட் 03 முதல் செப். 3 வரை
- தென் ஆப்பிரிக்க அணியின் இந்திய பயணம் : செப். 15 முதல் அக். 23 வரை
- வங்கதேச அணியின் இந்திய பயணம் : நவ. 3 முதல் நவ, 26 வரை
- வெஸ்ட் இண்டீஸ் அணியின் இந்திய பயணம் : டிச. 6 முதல் டிச. 22 வரை
- ஆஸ்திரேலிய அணியின் இந்திய பயணம் : ஜன.14 முதல் ஜன. 19 வரை
- இந்திய அணியின் நியூசிலாந்து பயணம் : ஜன.24 முதல் மார்ச். 4 வரை
ஒரு தொடர் முடிவடைந்த பின், மற்றொரு தொடருக்கு இந்திய அணி தயாராவதற்கான நேரம் கூட சரியாக கொடுக்கப்படவில்லை. இதனால் அதிகமான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதால் இந்திய அணியின் முக்கிய வீரர்களும் காயத்தை சந்தித்து வருகின்றனர்.