கோவிட்-19 பெருந்தொற்றினால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டு-வருகின்றன.
இந்நிலையில் வருகிற மே மாதம் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள அயர்லாந்து அணி டி20, ஒருநாள் தொடரில் விளையாடுவதாக இருந்தது. ஆனால் தற்போது நிலவிவரும் சூழல் காரணமாக இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் கலந்தாலோசித்து தொடரை ஒத்திவைக்க முடிவுசெய்யுமாறு ஐசிசி வேண்டுகோள்விடுத்திருந்தது.
இதனையடுத்து வங்கதேச கிரிக்கெட் வாரியம், அயர்லாந்து கிரிக்கெட் வாரியங்கள் இணைந்து இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள், டி20 தொடரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. மேலும் இத்தொடருக்கான தேதியும் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.