ஐபிஎல் தொடர் கிரிக்கெட் போட்டிகள் 2007ஆம் ஆண்டு முதல் நடைபெற்றுவருகிறது. இதில் பங்கேற்று வரும் விராட் கோலி தலைமையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடிவருகிறது. தற்போது ஐபிஎல்லின் 13-ஆவது சீசன் தொடங்குவதற்கு இன்னும் ஒன்பது மாதங்கள் உள்ளன.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை ஐபிஎல் போட்டிகளில் பெங்களூரு அணிக்கு ஐபிஎல் கோப்பை என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது. பெங்களூரு அணி கோலி, டி வில்லியர்ஸ் போன்ற அதிரடி வீரர்கள் பெற்றிருந்தபோதிலும் அந்த அணியால் ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியவில்லை.
அதற்காக தற்போது பெங்களூரு அணி நிர்வாகம் இரண்டு பெரிய மாற்றங்களை அணியில் செய்துள்ளது. 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த கேரி கிரிஸ்டன், கடந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
தற்போது ஆர்.சி.பி அணி நிர்வாகம் அவரை நீக்கி பதிலாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் பயிற்சியாளராக இருந்த சைமன் காட்டிச்சை ஆர்.சி.பி அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்துள்ளனர். மேலும் ஆர்.சி.பி அணியின் இயக்குனராக முன்னாள் நியூசிலாந்து அணியின் பயிற்சியாளராக இருந்த சைமன் ஹெசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அந்த அணியின் தலைவர் சஞ்சீவ் கூறுகையில், ஆர்.சி.பி அணியின் கோப்பை கனவை நனவாக்குவதற்காக இந்தாண்டு முதல் தலைமை பயிற்சியாளராக சைமன் காட்டிச்சும், அணியின் இயக்குனராக சைமன் ஹெசனும் செயல்படுவார்கள் என்றார். அதேபோல் அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த ஆஷிஷ் நெஹ்ராவையும் அந்த அணி நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.