இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் இந்தியாவின் உள்ளூர் டி20 திருவிழாவின் 14ஆவது சீசனை ஏப்ரல் இரண்டாம் வாரத்திலிருந்து தொடங்க பிசிசிஐ திட்டமிட்டுவருகிறது.
இதனை உறுதிசெய்யும் வகையில், கடந்த ஜனவரி 21ஆம் தேதிக்குள் ஐபிஎல் அணிகள் தாங்கள் தக்கவைக்கும் வீரா்களின் பட்டியலை வழங்க வேண்டுமென ஐபிஎல் நிர்வாகக் குழு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் தக்கவைத்த வீரர்களுக்கான பட்டியலை பிப்ரவரி 4ஆம் தேதி அன்று வெளியிட்டது. இதையடுத்து இந்தாண்டு ஐபிஎல் தொடருக்கான குறைந்த அளவிலான வீரர்கள் ஏலம் பிப்ரவரி 18ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என்ற அறிவிப்பையும் பிசிசிஐ வெளியிட்டது.
இதனைத்தொடர்ந்து இன்று (பிப். 18) நடைபெறும் ஐபிஎல் ஏலத்திற்காக ஐபிஎல் தொடரின் ஒவ்வொரு அணியும் சென்னைக்குப் படையெடுத்துள்ளனர். மேலும், இன்றைய வீரர்கள் ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தேர்வுசெய்ய விரும்பும் உத்தேச வீரர்களைப் பற்றி இப்பதிவில் காண்போம்.
சென்னை சூப்பர் கிங்ஸ்
மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் லீக் சுற்றுகளோடு வெளியேறியது. இதையடுத்து நடப்பாண்டு ஐபிஎல் சீசனிலிருந்து முரளி விஜய், கேதர் ஜாதவ், ஹர்பஜன் சிங், பியூஸ் சாவ்லா, மோனு சிங், ஷேன் வாட்சன் ஆகியோரை அணியிலிருந்து வெளியேற்றியது.
இதன்மூலம் ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 19 கோடியே ஒன்பது லட்சம் ரூபாய் என்ற நிதிநிலையைப் பெற்றுள்ளது. மேலும் இந்த ஏலத்தில் சிஎஸ்கே அணி 6 உள்நாட்டு வீரர்களையும், ஒரு வெளிநாட்டு வீரரையும் ஏலத்தில் எடுக்க முடியும்.
உத்தேச வீரர்கள் தேர்வு
பேட்ஸ்மேன்களில் இளம் வீரர் முகமது அசாருதீன், கருண் நாயர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரில் யாரேனும் ஒருவரையும், ஆல்ரவுண்டர்களில் ஹென்ட்ரிக்ஸ், ஷிவம் துபே, மொயீன் அலி, பந்துவீச்சாளர்களில் உமேஷ் யாதவ், கிருஷ்ணப்பா கௌதம் ஆகியோரை தங்கள் வசம் தக்கவைக்க வாய்ப்புகள் உள்ளன.
மும்பை இந்தியன்ஸ்
ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்திய அணி, தங்களது அணியிலிருந்து லசித் மலிங்கா, நாதன் குல்டர் நைல், ஜேம்ஸ் பாட்டின்சன், ரூதர்ஃபோர்ட், மெக்லகன், திக்விஜய் தேஷ்முக், பால்வந்த் ராய் ஆகியோரை வெளியனுப்பிதன் மூலம், 15 கோடியே 35 லட்சத்தை தன்வசம் வைத்துள்ளது.
உத்தேச வீரர் தேர்வு
பேட்ஸ்மேன்களில் ஹனுமா விஹாரி, டாம் பான்டன், கருண் நாயர், ஆல்ரவுண்டர்களில் மேக்ஸ்வெல், மொயீன் அலி, பந்துவீச்சாளர்களில் முஷ்டபிசூர் ரஹ்மான், ரிச்சர்ட்சன், பிரித்விராஜ் யர்ரா ஆகியோரைத் தேர்வுசெய்ய வாய்ப்புகள் உள்ளன.
பஞ்சாப் கிங்ஸ்
கே.எல். ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கடந்தாண்டு ஐபிஎல் சீசனில் லீக் சுற்றுகளோடு வெளியேறியது. இதையடுத்து, 2008அம் ஆண்டு ஐபிஎல் தொடர் முதல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் என்ற பெயருடன் விளையாடிவந்த பஞ்சாப் அணி நடப்பாண்டிலிருந்து அணியின் பெயரை பஞ்சாப் கிங்ஸ் என மாற்றியதோடு, இலட்சினையையும் மாற்றியுள்ளது.
அதேபோல் கடந்தாண்டு போட்டிபோட்டு ஏலத்தில் வீரர்களை வாங்கி குவித்த பஞ்சாப் அணி, அதில் பாதிக்கும் மேற்பட்ட வீரர்களை வெளியனுப்பியுள்ளது.
அப்படி வெளியேற்றப்பட்டவர்கள், கிளென் மேக்ஸ்வெல், கருண் நாயர், வில்ஜோன், ஜெகதீஷா சுஜித், முஜீப் உர் ரஹ்மான், ஷெல்டன் காட்ரோல், ஜிம்மி நீஷம், கிருஷ்ணப்பா கௌதம், தஜிந்தர் சிங் ஆகியோரை வெளியேற்றி 53 கோடியே இரண்டு லட்சம் ரூபாயை தக்கவைத்துள்ளது.
உத்தேச வீரர்கள் தேர்வு
பேட்ஸ்மேன்களில் ஷாரூக் கான், டேவிட் மாலன் ஆகியோரையும், ஆல்ரவுண்டர்களில் ஹெண்ட்ரிக்ஸ், ஷகிப் அல் ஹசன், டாம் கர்ரன், பந்துவீச்சாளர்களில் பிரித்விராஜ் யர்ரா, ஜலஜ் சக்சேனா, ரிச்சர்ட்சன் ஆகியோரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
ராஜஸ்தான் ராயல்ஸ்
கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் அணியின் கேப்டனான ஸ்டீவ் ஸ்மித்தையே வெளியேற்றி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இந்திய வீரர் சஞ்சு சாம்சனை கேப்டனாக நியமித்துள்ளது. அதேசமயம், ஸ்டீவ் ஸ்மித், வருண் ஆரோன், டாம் கர்ரன், அங்கித் ராஜ்புட், அனிருதா ஜோஷி, ஷசாங் சிங், ஒசேன் தாமஸ், ஆகாஷ் சிங் ஆகியோரை அணியிலிருந்து வெளியேற்றியும், ராபின் உத்தப்பாவை சிஎஸ்கே அணிக்கும் ஒப்படைத்தது.
இதன்மூலம் ஐபிஎல் வீரர்கள் ஏலத்திற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ரூ.37.85 கோடி கிடைத்துள்ளது. மேலும் 9 உள்நாட்டு வீரர்கள், 3 வெளிநாட்டு வீரர்களை ஒப்பந்தம் செய்யும் வாய்ப்பும் ராஜஸ்தான் அணிக்கு உருவாகியுள்ளது.
உத்தேச வீரர்கள் தேர்வு
பேட்ஸ்மேன்களில் அலெக்ஸ் ஹேல்ஸ், ஷாரூக் கான், ஆல்ரவுண்டர்களில் ஷகிப் அல் ஹசன், கிறிஸ் மோரிஸ், பந்துவீச்சாளர்களில் யுமேஷ் யாதவ், கெய்ல் ஜெமிசன் ஆகியோரை தேர்ந்தெடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பிற அணிகளின் உத்தேச வீரர்கள் தேர்வு
இன்றைய ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் 61 வீரர்களை மட்டும் தேர்வுசெய்ய முடியும் என்பதால், சர்வதேச அளவில் அதிரடி காட்டும் வெளிநாட்டு வீரர்கள் பட்டியலில் டாம் பான்டன், கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் ஹேல்ஸ், மொயீன் அலி, ஆரோன் ஃபின்ச், எவின் லீவிஸ், ஷகிப் அல் ஹசன் ஆகியோருக்குப் பெரும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் உள்ளூர் வீரர்களில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், ஷிவம் தூபே, முகமது அசாருதின், விஷ்ணு சொலன்கி, ஷாரூக் கான் ஆகியோரைத் தேர்வுசெய்ய அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அணிகள் வைத்துள்ள தொகை
தற்போது நடைபெறவிருக்கும் ஏலத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அதிகபட்சமாக 53 கோடியே 20 லட்சம் ரூபாய் ஏலத் தொகையாக வைத்துள்ளது. இதைத்தொடர்ந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 35 கோடியே 90 லட்சம் ரூபாய், ராஜஸ்தான் ராயல்ஸ் 34 கோடியே 85 லட்சம் ரூபாய், சென்னை சூப்பர் கிங்ஸ் 22 கோடியே 90 லட்சம் ரூபாய், மும்பை இந்தியன்ஸ் 15 கோடியே 35 லட்சம் ரூபாய், டெல்லி கேபிட்டல்ஸ் 12 கோடியே 9 லட்சம் ரூபாய், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன் ரைசர்ஸ் ஆகிய இரு அணிகளும் தலா 10 கோடியே 75 லட்சம் ரூபாய் ஏலத் தொகையாக வைத்துள்ளன.
இடம் மற்றும் நேரம்
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலம் சென்னையிலுள்ள பிரபல நட்சத்திர விடுதியில், இன்று மதியம் 3 மணிக்குத் தொடங்குகிறது. இந்நிகழ்வை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கும் முக்கியப் பிரபலங்கள்
காசி விஸ்வநாதன் (சிஎஸ்கே), நடிகை பிரீத்தி ஜிந்தா (பஞ்சாப் கிங்ஸ்), பிரிஜேஷ் பட்டேல் (ஆர்சிபி), நீடா அம்பானி, ஆகாஷ் அம்பானி (மும்பை இந்தியன்ஸ்), வெங்கி மைசூர் (கேகேஆர்) போன்ற முக்கியப் பிரபலங்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம் அணியின் பயிற்சியாளர்களில், ஸ்டீபன் ஃபிளெம்மிங் (சிஎஸ்கே), மஹேலா ஜெயவர்த்தனே (மும்பை இண்டியன்ஸ்), சிமோன் கைட்ச் (ஆர்சிபி), ஆண்ட்ரூ மெக்டொனால்ட் (ஆர்ஆர்), அனில் கும்ப்ளே (பஞ்சாப் கிங்ஸ்), பிராண்டன் மெக்கலம் (கேகேஆர்), முத்தையா முரளிதரன் (எஸ்ஆர்எச்), ரிக்கி பாண்டிங் (டிசி) ஆகியோர் பங்கேற்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஆஸ்திரேலியன் ஓபன்: நடால் கனவை தகர்த்த சிட்சிபாஸ்