இந்தியா-பாகிஸ்தான், ஆஸ்திரேலியா-இங்கிலாந்து போன்ற ரைவல்ரி அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு சற்றும் சளைத்தது அல்ல சென்னை-மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டி!
ஒவ்வொரு ஆண்டும் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு சமூகவலைதளங்களில் ரசிகர்களிடையே ஒரு போரே நடைபெறும். சிஎஸ்கேவிடம் தோற்றுவிடக் கூடாது என மும்பை ரசிகர்களும், பால்தான்ஸிடம் தோற்றுவிடக் கூடாது என சிஎஸ்கே ரசிகர்களும் வேண்டிக் கொண்டே இருப்பார்கள்.
ஆனால் இந்த ரைவல்ரி போட்டிகளில் அதிகப்படியாக வென்றது மும்பை அணி தான். கடந்த ஆண்டு மும்பை அணிக்கு எதிராக சென்னை ஆடிய நான்கு போட்டிகளிலும் சென்னை அணி படுதோல்வி அடைந்தது. அதிலும் இறுதிப்போட்டியில் வாங்கிய அடியை ரசிகர்கள் வாழ்வில் எப்போதும் மறக்கமாட்டார்கள். ஆனால் இதற்கு இந்த ஆண்டு நடைபெற்ற தொடக்கப் போட்டியில் மும்பை அணிக்கு சென்னை பதில் அளித்தது.
இந்த ஆண்டைப் போல் தான் கடந்த 2018ஆம் ஆண்டு தொடக்கப் போட்டியும் சென்னை - மும்பை அணிகளுக்கு இடையில் நடைபெற்றது. சிஎஸ்கே அணியின் ’கம்பேக்’ போட்டி என்பதால் அந்த அணியின் ரசிகர்கள் தாரை தப்பட்டையுடன் கொண்டாட அப்போது தயாராக இருந்தார்கள். ஆனால் கொண்டாட்டம் நடக்க வேண்டும் என்றால் வெற்றி முக்கியமல்லவா? அந்த வெற்றி கடைசி நொடி வரை போராடி கிடைத்தால் எப்படி இருக்கும்? அதுபோன்றதொரு மகத்தான வெற்றியைதான் சென்னை அணி அன்று ஈட்டியது.
டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி, வழக்கம்போல் பவுலிங் எனத் தெரிவித்தார். பின்னர் களமிறங்கிய சென்னை அணி, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், குர்ணால் பாண்டியா ஆகியோரின் பேட்டிங்கால் 20 ஓவர்களுக்கு 165 ரன்கள் எடுத்தது.
மும்பை மைதானத்தில் நடந்த போட்டி என்பதாலும், பும்ரா, முஷ்தாஃபிகுர் ரஹ்மான், மெக்லனகன் ஆகியோர் மீதுள்ள நம்பிக்கையாலும் மும்பை ரசிகர்கள் பந்துவீச்சின்போது பெரும் ஆரவாரம் செய்த வண்ணம் இருந்தனர். ரசிகர்களுக்கு ஏற்றாற்போல் சென்னை அணியின் பேட்டிங்கும் கொஞ்சம் ஆட்டம் கண்டது.