உலகிம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இதுவரை 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம் எனவும், பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதையும் தவிர்க்கவேண்டும் என அந்தந்த நாட்டு அரசுகள் அறிவுறுத்தியுள்ளன.
கொரோனா வைரஸால் பல விளையாட்டு போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் மார்ச் 29ஆம் தேதி நடக்கும் என பிசிசிஐ ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால் இப்போது இந்திய அரசு ஏப்ரல் மாதம் 15ஆம் தேதிவரை மற்ற நாட்டு பயணிகளுக்கு விசா வழங்க வேண்டாம் என உத்தரவிட்டுள்ளது.
இதனால் வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நாளை மறுநாள் ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டம் கூடவுள்ளது. எனவே ஐபிஎல் தொடர் மைதானத்தில் ரசிகர்கள் இல்லாமல் நடக்கலாம் அல்லது கொரோனா வைரஸ் தாக்குதல் கட்டுப்படுத்தப்படும்வரை ஐபிஎல் தொடர் ஒத்தி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தியாவில் இதுவரை 60க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. அதில் 36 பேர் இந்தியர்கள் எனவும், மீதமுள்ள 24 பேர் வெளிநாட்டினர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் குறித்து உலக சுகாதார மையம், அனைத்து அரசுகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இத்தாலி கால்பந்து வீரருக்கு கொரோனா பாதிப்பு!