சமீபத்தில் 2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்வு கொல்கத்தாவில் நடைபெற்றது. இதையடுத்து ஐபிஎல் தொடரின் போட்டி அட்டவணை எப்போது வெளியாகும் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
தற்போது 2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் இறுதிப்போட்டி மும்பை வான்கடேவில் நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியன. நடப்பு சாம்பியன் அணியின் சொந்த மைதானத்தில் அடுத்தாண்டுக்கான இறுதிப்போட்டி நடைபெறுவது வழக்கம். அதன்படி, 2019இல் சாம்பியன் பட்டத்தை மும்பை அணி வென்றதால், அந்த இறுதிப்போட்டியை மும்பையிலுள்ள வான்கடே மைதானத்தில் மே மாதம் 24ஆம் தேதி நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ஐபிஎல் நிர்வாகி கூறுகையில், "ஐபிஎல் தொடரில் பங்கேற்கவுள்ள அணிகளுக்கான போட்டி அட்டவணை இதுவரை தயார் செய்யப்படவில்லை. இன்னும் சில நாட்களில் அட்டவணை வெளியாகும். ஒவ்வொரு ஆண்டும் 57 நாள்கள் நடக்கும் ஐபிஎல் போட்டிகள், இந்த ஆண்டும் அதே கால நிலையில் நடைபெறும்.
மாலை 4 மணிக்கு நடத்தப்படும் போட்டிகளின்போது மைதானங்களுக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைகிறது என நிர்வாகம் கவலை தெரிவிக்கிறது. ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் தொடரை முடிக்கவேண்டும் என்றால், நிச்சயம் ஒவ்வொரு வார இறுதியிலும் இரண்டு போட்டிகள் கட்டாயமாக நடத்த வேண்டும். இந்த ஆண்டு இரவு 8 மணிக்கு தொடங்கும் போட்டிகளை அரை மணி நேரத்திற்கு முன்னதாக, 7.30 மணிக்கே தொடங்க ஆலோசித்துவருகிறோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 6 பந்துகளில் 5 சிக்சர்: பிக் பாஷில் பறக்கவிட்ட கொல்கத்தாவின் புதிய வரவு