தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'ஐபிஎல் போட்டிகளில் மாற்றம் நிகழும்'  - கங்குலி - ஐபிஎல் தொடரில் மாற்றம் நிகழும் - கங்குலி

கொரோனா வைரஸால் ஐபிஎல் தொடர் இரண்டு வாரங்களுக்கு தள்ளிப்போனதால், போட்டிகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

Will decide future action on IPL in interest of public health: BCCI
Will decide future action on IPL in interest of public health: BCCI

By

Published : Mar 14, 2020, 7:53 PM IST

கொரோனா வைரஸால் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் ரத்து செய்யப்பட்ட நிலையில், ஐபிஎல் தொடர் மார்ச் 29ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வைரஸை பரவ விடாமல் தடுக்கும் முயற்சியில் மத்திய அரசு வரும் ஏப்ரல் 15ஆம் தேதி அனைத்துச் சுற்றுலா நுழைவு விசாக்களையும் நிறுத்திவைத்துள்ளது. இதனால், வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த இக்கட்டான சூழலில் ஐபிஎல் தொடரை நடத்துவது குறித்து பிசிசிஐ, எட்டு அணி உரிமையாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனையில் ஐபிஎல் தொடர் வெளிநாடுகளில் நடைபெற வாய்ப்பில்லை என்ற தகவலும் வெளியானது. இதில், வீரர்கள் ரசிகர்களின் பாதுகாப்புதான் முக்கியம் என்றும், போட்டிகளைக் குறைப்பது உள்ளிட்ட ஏழு யோசனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

கங்குலி

இந்நிலையில், ஆலோசனைக் குழு முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பிசிசிஐ தலைவர் கங்குலி கூறுகையில், "கொரோனா வைரஸால் ஐபிஎல் தொடர் இரண்டு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் போட்டிகளின் எண்ணிக்கை குறைவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் எத்தனை போட்டிகள் குறையும் என்பது தற்போது சொல்ல முடியாது. ஒவ்வொரு வாரமும் கொரோனா வைரஸ் பாதிப்பின் நிலையை கண்காணிக்கவுள்ளோம். அதன்படி நாங்கள் அணி உரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி முடிவு எடுக்க உள்ளோம். ஐபிஎல் தொடரை நடத்த எங்களுக்கு எந்த அளவுக்கு விருப்பம் இருக்கிறதோ, அதே அளவு மக்களின் பாதுகாப்பின் மீதும் அக்கறை உள்ளது" என்றார்.

முன்னதாக, ஐபிஎல் தொடர் மார்ச் 29ஆம் தேதி முதல் மே 24ஆம் தேதிவரை நடைபெறவிருந்தது. கொரோனா வைரஸால் அந்தத் தொடர் ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்கினாலும் போட்டிகள் திட்டமிட்டப்படி மே 24ஆம் தேதி முடிவடையுமா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. எனினும், ஐபிஎல் தொடர் நடைபெறுமா என்ற கேள்விக்கு அடுத்து நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் பதில் கிடைக்கும் எனத் தெரிகிறது.

இதையும் படிங்க:'வரும் முன் காப்போம்' - கொரோனா குறித்து கோலி ட்வீட்!

ABOUT THE AUTHOR

...view details