ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாபிற்கு எதிரான லீக் போட்டியில் விளையாடியதன் மூலம் ராயல் சேலஞ்சர் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன் அடித்தவர், ஒரு நாள் போட்டி, டெஸ்ட் என அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலும் பல சாதனைகளைப் புரிந்துள்ள இந்திய அணியின் கேட்பன் விராட் கோலி, தற்போது மற்றொரு சாதனையும் படைத்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், ஒரே அணிக்காக 200 போட்டிகளை விளையாடிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 2008ஆம் ஆண்டு முதல் ராயல் சேலஞ்சர் பெங்களூரு அணிக்காக விளையாடிவரும் விராட் கோலி. அந்த அணிக்காக சாம்பியன்ஸ் லீக் டி-20 தொடரில் 15 போட்டிகளிலும், ஐபிஎல் தொடரில் 185 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
"ஆர்.சி.பி உடனான எனது உணர்வை பலர் புரிந்து கொள்ளவில்லை. 2008ஆம் ஆண்டு ஆர்சிபி அணிக்காக 200 போட்டிகள் விளையாடுவேன் என்று கூறியிருந்தால், அதை நான் நம்பியிருக்க மாட்டேன். இது எனக்கு கிடைத்த மரியாதையாக கருதுகிறேன்" என்று ஆர்சிபிக்காக தனது 200வது போட்டியில் பங்கேற்பதற்கு முன்பு விராட் கோலி கூறினார்.
ஐபிஎல் தொடர் தொடங்கிய கடந்த 12 ஆண்டுகளில் ஒரு முறைக் கூட விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணியால் ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியவில்லை . இதனை மாற்றி அமைத்து வரலாறு படைக்கும் நோக்கில் இந்த ஆண்டு நடந்துகொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி விளையாடி வருகிறது. ஐ.பி.எல் 2020இல் புள்ளிகள் அட்டவணையில் மூன்றாவது இடத்தில் உள்ள ஆர்சிபி, இந்த ஆண்டு கோப்பை கைப்பற்றும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.