கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த ஐபிஎல் தொடர், இம்மாதம் 19ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து, ஐபிஎல் அணிகளைச் சேர்ந்த வீரர்கள் கடந்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சென்று, அங்கு ஆறு நாட்கள் தனிமைப்படுத்துதலை மேற்கொண்டனர்.
இந்நிலையில், ஐக்கிய அரசு அமீரகத்திற்குச் சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள், ஊழியர்களுக்கு கரோனா கண்டறிதல் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இச்சோதனையின் முடிவில் அணி வீரர்கள் உள்பட 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து கரோனா உறுதிசெய்யப்பட்ட வீரர்கள், ஊழியர்களுக்கு இரண்டு நாள்களுக்கு ஒருமுறை கரோனா கண்டறிதல் சோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. தொடர்ந்து செப்.01ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையின் முடிவில், தொற்று பாதித்த அனைவருக்கும் தொற்று இல்லை என வந்தது.
இருப்பினும் நேற்று(செப்.3) மேற்கொள்ளப்பட்ட மூன்றாம் கட்ட பரிசோதனையிலும் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 13 பேரின் முடிவுகளும் கரோனா தொற்று இல்லை என்பதை உறுதிசெய்துள்ளது. இதனைத் தொடர்ந்து அணியின் மற்ற வீரர்கள் தங்களது பயிற்சிகளை இன்று முதல் தொடங்குவர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து சிஎஸ்கே அணி நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட வீரர்கள், ஊழியர்களுக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட கரோனா கண்டறிதல் சோதனையின் முடிவில், அவர்களுக்கு கரோனா தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அணியின் மற்ற வீரர்கள் இன்று (செப்.04) முதல் மீண்டும் தங்களது பயிற்சிக்கு திரும்புவர்.
அதேசமயம் முன்னதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வீரர்கள் இருவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்குப் பிறகே அணியில் இணைவர்’ என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:'சின்ன தல' ரெய்னா அணிக்கு திரும்புவரா? கைவிரிக்கும் சீனிவாசன்