கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தாண்டு ஐபிஎல் தொடர் செப்.19ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுமென பிசிசிஐ அறிவித்தது. இதையடுத்து ஐபிஎல் அணிகளைச் சேர்ந்த வீரர்கள் கடந்த வாரம் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று, அங்கு ஆறு நாட்கள் தனிமைப்படுத்துதலை மேற்கொண்டுனர்.
இந்நிலையில் ஐக்கிய அரசு அமீரகத்திற்குச் சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கரோனா கண்டறிதல் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இச்சோதனையின் முடிவில் அணி வீரர் ஊள்பட 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கரோனா உறுதி செய்யப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ஐபிஎல் அலுவலர் கூறுகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் சமீபத்தில் இந்திய அணிக்காக விளையாடிய வேகப்பந்துவீச்சாளர், சிஎஸ்கே அணி நிர்வாகத்தின் மூத்த நிர்வாகி, அவரது மனைவி மற்றும் சமூக ஊடகவியலாளர்கள் என 12 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.
இதைத்தொடர்ந்து கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களை மேலும் ஏழு நாட்கள் தனிமைப்படுத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் வீரருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி ஐபிஎல் தொடர் நடைபெறுமா? என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதையும் படிங்க:போர்வையில் தோனியை வடிவமைத்த நெசவு தொழிலாளி!