இந்தியாவுக்கு எப்படி 1983, 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரோ அதுபோல பாகிஸ்தானுக்கு 1992 உலகக்கோப்பை தொடர் எப்போதுமே ஸ்பெஷல். தற்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் அந்த அணி 1992 உலகக்கோப்பை வென்று சரித்திரம் படைத்தது மட்டுமின்றி நாங்களும் சிறந்த அணிதான் என்பதை உலகிற்கு ஆணித்தரமாக எடுத்துரைத்தது.
ஒருநாள் போட்டியில் தற்போதைய வளர்ச்சிக்கான அடித்தளமே 1992 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரிலிருந்துதான் தொடங்கியது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற அந்தத் தொடரின் முதல் அரையிறுதி போட்டி மார்ச் 21, 1992இல் நடைபெற்றது. ஆக்லாந்தில் நடைபெற்ற இப்போட்டியில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது.
மார்டின் குரோவ் தலைமையிலான நியூசிலாந்து ரசிகர்களாலும், வல்லுநர்களாலும் உலகக்கோப்பை வெல்ல ஃபேவரைட் அணியாக இருந்தது. ஹோம் அட்வான்டேஜ் ஒரு காரணமாக இருந்தாலும், இன்னொரு காரணம் அந்த அணியின் ஆட்டத்திறனும் அபாரமாக விளங்கியது. குரூப் சுற்றுகளில் விளையாடிய எட்டு போட்டிகளில் பாகிஸ்தானைத் தவிர்த்து மற்ற ஏழு அணிகளையும் லாவகமாக வீழ்த்தியது நியூசிலாந்து.
இருப்பினும், குரூப் சுற்றுகளின் கடைசி போட்டியில் பாகிஸ்தானிடம் அடைந்த தோல்விக்கு இம்முறை (அரையிறுதி போட்டி) நியூசிலாந்து பதிலடி கொடுக்கும் என்ற நம்பிக்கையோடு அந்த அணியின் ரசிகர்கள் மைதானத்திற்கு வந்திருந்தனர். டாஸ் வென்ற நியூசிலாந்து அணி எந்தவித தயக்கமுமின்றி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது.
மார்டின் குரோவின் அதிரடியிலும், கென் ரூதர்ஃபோர்டின் பொறுப்பான ஆட்டத்தினாலும் நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகள் இழப்புக்கு 262 ரன்களைக் குவித்தது. மார்டின் குரோவ் 83 பந்துகளில் 91 ரன்களில் ஆட்டமிழந்தார். அதில், ஏழு பவுண்டரிகள், மூன்று சிக்சர்கள் அடங்கும்.
அந்தத் தொடரில் அதுவரை பாகிஸ்தான் அணி ஒரேயோரு முறை மட்டுமே 200க்கும் மேற்பட்ட ரன்களை சேஸ் செய்திருந்தது. அதனால், நியூசிலாந்து அணியே இப்போட்டியில் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கும், அந்த அணியின் வீரர்களுக்கும் மனரீதியாக பலமாக இருந்தது. அதற்கு ஏற்றார்போல் பாகிஸ்தான் அணி 35 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 140 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.
ஆனால், பாகிஸ்தான் அணியை எப்போதும் அவ்வளவு எளிதாக குறைத்து மதிப்பிட முடியாது. ஏனெனில் கடைசி விக்கெட்வரை வெற்றிக்காக போராடும் குணம் மற்ற அணிகளைக் காட்டிலும் பாகிஸ்தான் அணிக்கு அதிகமாகவே இருக்கும். முக்கியமாக, எப்போதும் நம்ப முடியாத அதிசயத்தை அந்த அணி நிகழ்த்தும்.
அதேபோல், அன்றைய நாளில் 22 வயதே ஆன இளம் வீரர் இன்சமாம்-உல்-ஹக் மூலம் அந்த அதிசயம் நிகழ்ந்தது. பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 15 ஓவர்களில் 123 ரன்கள் தேவை என்ற நிலையில் அவர் களமிறங்கினார் . சுருக்கமாக சொல்ல போனால் ஒரு ஓவருக்கு எட்டு ரன்கள் அடித்தாக வேண்டிய நிலை. 1990களில் இது சாத்தியமே இல்லை. ஆனால், அந்த அசாத்தியத்தை சாத்தியமாக்கினார் ஹக்.
ஜாவித் மியான்டட்டுன் ஜோடி சேர்ந்த அவர் டேனி மாரிசன், க்ரிஸ் ஹாரிஸ், படேல், வில்லி வாட்சன் போன்ற மிரட்டலான பிளாக் கேப்ஸின் பந்துவீச்சை ஒரு பேட் பார்த்தார். ஸ்வீப் ஷாட், கட் ஷாட், லாஃப்டெட் ஷாட் என பந்து பவுண்டரிக்கு பறந்தது. இன்சமாம் 31 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். அவரை போன்ற ஸ்வீப் ஷாட்டை நேர்த்தியாக ஆடக்கூடிய பேட்ஸ்மேன்கள் இன்றளவும் இல்லை.
தற்போதைய கிரிக்கெட்டின், ’360’ டி வில்லியர்ஸை எப்படி ரன் அவுட் மட்டும்தான் செய்ய முடியமோ அதுபோலதான் இவரையும் ரன் அவுட் மட்டும்தான் செய்ய முடியும். பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி ஐந்து ஓவர்களில் 36 ரன்கள் தேவைப்பட்டபோது இன்சமாம் 37 பந்துகளில் ஏழு பவுண்டரிகள், ஒரு சிக்சர் என 60 ரன்களில் ரன் அவுட் ஆனார். இருப்பினும், பாகிஸ்தானின் வெற்றியை அவர் எப்போதோ செட் செய்துவிட்டுதான் பெவிலியனுக்கு திரும்பினார். அவர் செட் செய்துகொடுத்த களத்தில் அவருக்கு பின் வந்த மொயின் கான், ஜாவித் மியான்டடுடன் அதிரடியாக விளையாட பாகிஸ்தான் அணி 49 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி இறுதிச் சுற்றுக்கு முதல்முறையாக நுழைந்தது.
பாகிஸ்தான் அணியின் ஹீரோவாக வலம் வந்த இன்சமாம், இப்போட்டி தொடங்குவதற்கு முன்பு இம்ரான் கானிடம் சென்று, ”எனக்கு கடும் காய்ச்சல் இருப்பதால் இப்போட்டியில் விளையாட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை எனக் கூறினார். அதற்கு இம்ரான் கான், இந்தப் போட்டியில் நீ எப்படி விளையாட போகிறாய் என்பதை மட்டும் யோசி வேறு எதையும் யோசிக்காதே. களத்திற்குள் சென்றால் நீ உனது இயல்பான ஆட்டத்தை ஆடு” என இன்சமாமிற்கு அறிவுறுத்தினார்.
இம்ரான் கானின் இந்தப் பேச்சு இன்சமாமிற்கு தைரியத்தை கொடுத்தது. ஒரு சில வீரர்களின் மறக்க முடியாத ஒரு இன்னிங்ஸ் அவர்களை ஜாம்பவான்களாக மாற்றும். அதுபோலதான் இன்சமாம்-உல்-ஹக்கிற்கும். 1983 உலகக் கோப்பையில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் கபில்தேவ் களமிறங்கி ஒரு மேஜிக் நிகழ்த்தி அணியை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றார்.
எப்படி இந்தியாவுக்கு கபில்தேவ் ஒரு மேஜிக் நிகழ்த்தினாரோ அப்படி 1992 உலககக்கோப்பைத் தொடரின் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இன்சமாம் மேஜிக் நிகழ்த்தினார். அந்த மேஜிக்குக்கு பின்னர்தான் இன்சமாம் என்ற சாதாரணமான வீரர் ஜாம்பவானாக கிரிக்கெட் உலகில் பரிணமித்தார்.
1990களில் பாகிஸ்தான் அணியில் ஆக்ரோஷமான வேகப்பந்து வீச்சாளர்கள் பலர் உற்பத்தியாகிக் கொண்டிருந்த சமயத்தில் முதன்முதலில் மேஜிக் பேட்ஸ்மேனாக இன்சமாம் உற்பத்தியாகி இன்றுடன் 28 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
இதையும் படிங்க:சச்சின் மாதிரி எனக்கு டார்ச்சர் கொடுத்த பவுலரே இல்லை - இன்சமாம்-உல்-ஹக்!