இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தது. அதன்படி, இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா, கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்கத்தில் நிதானம் காட்டினார். அணியின் ஸ்கோர் 21 ரன்களை மட்டுமே எட்டிய நிலையில், ஷெல்டன் காட்ரேல் பந்துவீச்சில் கே.எல். ராகுல் ஹெட்மயரிடம் கேட்ச் தந்து ஆறு ரன்களுக்கு அவுட்டானார்.
கே.எல். ராகுல் - ரோஹித் சர்மா அவரைத் தொடர்ந்து வந்த கோலி, ஒரு பவுண்டரி அடித்த வேகத்தில் காட்ரெல் பந்துவீச்சில் இன்சைட் எட்ஜ் போல்டாகி நான்கு ரன்களுக்கு பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதனால், இந்திய அணி ஏழு ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 25 ரன்களை எடுத்திருந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நல்ல ஃபார்மில் இருந்த கோலி இன்றைய ஆட்டத்தில் சதம் விளாசுவார் என எதிர்பார்த்த ரசிகர்களின் நம்பிக்கை பொய்யானது.
இந்த நிலையில், நான்காவது வரிசையில் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயருடன் ஜோடி சேர்ந்த ரோஹித் சர்மா, தனது பொறுப்பான ஆட்டத்தால் அணியின் ஸ்கோரை உயர்த்தினார். பேட்டிங்கில் கே.எல். ராகுல், கோலி ஆகியோர் சொதப்பினாலும் ஹிட்மேன் ரோஹித் சர்மா இருக்கிறாரே என ரசிகர்கள் நம்பிக்கை வைத்த நிலையில், ரோஹித் சர்மா.. அல்சாரி ஜோசஃப் பந்துவீச்சில் பொல்லார்டிடம் கேட்ச் தந்து 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
ரோஹித் சர்மாவைத் தொடர்ந்து, ரிஷப் பந்த் ஐந்தாவது வரிசையில் களமிறங்கி விளையாடிவருகிறார். கடந்த நான்கு ஆண்டுகளாக இந்திய அணியின் ரன்குவிப்புக்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மா, கோலி ஆகியோர் அதிகமாக பங்குவகித்துவந்தனர். தற்போது அவர்கள் சொதப்பியதால், இளம் வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் ஆகியோர் தங்களது திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.
சற்றுமுன்வரை இந்திய அணி 29 ஓவர்களின் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 129 ரன்களை எடுத்துள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் 45 ரன்களுடனும், ரிஷப் பந்த் 28 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.