இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்டத் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றநிலையில், தொடரின் சாம்பியனைத் தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி கட்டாக்கில் இன்று நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி முதலில் பந்து வீச தீர்மானித்தார். காயம் காரணமாக இந்திய பந்து வீச்சாளர் தீபக் சாஹர் விலகியதால், அவருக்குப் பதிலாக அறிமுக வீரர் நவ்தீப் சைனி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் எந்தவித மாற்றமும் இன்றி இன்றைய ஆட்டத்தில் களமிறங்கியது.
இதைத்தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து ரன் குவிப்பில் தடுமாறியது. தொடக்க வீரர்களான எவின் லெவிஸ் 21, ஷாய் ஹோப் 42, ரோஸ்டான் சேஸ் 38, ஹெட்மயர் 37 என அடுத்தடுத்து ஆட்டமிழக்க அந்த அணி 31.4 ஓவர்களில் 131 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்தது.
இந்த நிலையில், ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நிக்கோலஸ் பூரான் - கேப்டன் பொல்லார்ட் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
42 ஓவர்கள் முடிவில் 210 ரன்கள் எடுத்து பேட்டிங்கில் சற்று அடக்கி வாசித்த நிக்கோலஸ் பூரான், அதன்பின் அதிரடியான ஆட்டத்தில் ஈடுபட்டார். ஒருமுனையில் பூரான் பவுண்டரிகளை அடிக்க, மறுமுனையில் பொல்லார்ட் சிங்கிள் எடுத்து அவருக்கு ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்து விளையாடினார்.