இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டியில் இந்திய அணி வென்றது. இதனால், இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமன் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு வெஸ்ட் இண்டீஸ் அணி தள்ளப்பட்டது. இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது.
புவனேஷ்வர் குமார் விக்கெட் வீழ்த்தியபோது... பின்னர் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்கமே சோகமாக அமைந்தது. இரண்டாவது ஓவரிலேயே லெவிஸ் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற, அவரைத் தொடர்ந்து சுனில் நரைன் 4 ரன்களில் வெளியேறி அதிர்ச்சியளித்தார்.
பின்னர் களமிறங்கிய பூரான் - ரோவ்மன் பொவெல் இணை நிதானமாக ரன்களை சேர்த்தது. இந்த இணை 10 ஓவர்களில் விக்கெட்டை இழக்காமல் அணியின் ஸ்கோரை 62ஆக உயர்த்தியது. பூரான் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, ரோவ்மன் அதிரடியாக ஆடினார். சிறப்பாக ஆடி ய ரோவ்மன் டி20 போட்டிகளில் தனது 2ஆவது அரைசதத்தைப் பதிவு செய்தார். 13 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி 83 ரன்களை எடுத்தது.
பின்னர் 14ஆவது ஓவரை வீசிய குருணால் பாண்டியா, இரண்டாவது பந்தில் பூரானை 19 ரன்களிலும், 5ஆவது பந்தில் ரோவ்மனை 54 ரன்களிலும் வெளியேற்றி இந்திய அணிக்கு வலு சேர்த்தார்.
பின்னர் அதிரடி ஆட்டத்திற்கு பெயர்போன பொல்லார்ட் - ஹெட்மயர் இணை சேர்ந்தது. இவர்கள் 15ஆவது ஓவரில் 6 ரன்கள் சேர்த்தனர், வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற 30 பந்துகளில் 73 ரன்கள் தேவைப்பட்டது. பின்னர் 16ஆவது ஓவரில் மூன்று பந்துகளில் 3 ரன்கள் சேர்க்க, மோசமான வானிலை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.