இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் அடங்கிய டி20, ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது. இதில், டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்ற நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.
இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்டு முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்தார். இப்போட்டிக்கான இந்திய அணியில் சிபம் துபே இடம்பெற்று, ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கே.எல்.ராகுல் ஆறு ரன்களிலும், அவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் கோலி நான்கு ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
ரிஷப் பந்த் - ஸ்ரேயாஸ் ஐயர் இந்த நிலையில், ஓரளவிற்கு தாக்குப் பிடித்து விளையாடிய ரோஹித் சர்மா 36 ரன்களில் வெளியேற, இந்திய அணி 18.1 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 80 ரன்களை எடுத்திருந்தது. இந்த இக்கட்டான நிலையில், ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் - ரிஷப் பந்த ஆகியோர் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். இந்த ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 114 ரன்கள் சேர்த்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் 70 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில், தனது ஃபென்சி ஷாட்டுகள் மூலம் ரன்களை அடித்து வந்த ரிஷப் பந்த் ஒருநாள் போட்டியில் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார். இதுவரை தன் மீது வைக்கப்பட்ட விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி தரும் வகையில், அவரது பேட்டிங் அமைந்திருந்தது. சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த ரிஷப் பந்த், பொல்லார்டு வீசிய 40ஆவது ஓவரில் ஹெட்மயரிடம் கேட்ச் தந்து 71 ரன்களில் ஆட்டமிழந்தார். அதில் ஏழு பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும்.
அதன்பின் கேதர் ஜாதவ் 40 ரன்களிலும், ஜடேஜா 21 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேற, இறுதி ஓவரில் சிவம் துபே ஒன்பது ரன்களுக்கு நடையைக் கட்டினார். இறுதியில், இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 288 ரன்களை எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஷெல்டன் காட்ரெல், அல்சாரி ஜோசஃப், கீமோ பவுல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இந்திய அணியின் ரன்குவிப்புக்கு பெரும்பாலான நேரங்களில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மா, கோலி ஆகியோர் அதிகமாக பங்கு வகித்துவந்த நிலையில், இன்றைய ஆட்டத்தில் சொதப்பியபோதும் இளம் வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் ஆகியோர் தங்களது திறமையை வெளிப்படுத்தி கெளரவமான ஸ்கோரை எட்ட வைத்துள்ளனர்.