இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க மகளிர் அணி டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே இரண்டு ஆட்டங்கள் மழையினால் பாதிக்கப்பட்ட நிலையில் அதனை ஈடுகட்டுவதற்காக ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை ஆறு போட்டிகளாக மாற்றியமைத்தது பிசிசிஐ.
அதன்படி நேற்று தொடங்கிய ஐந்தாவது டி20 போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க மகளிர் அணி இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை பறிகொடுத்து திணறியது.
இதனால் அந்த அணி இருபது ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 98 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் ராதா யாதவ் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய மகளிர் அணி சிறப்பான தொடக்கத்தை தந்தது. அதன் பின் ஸ்மிருதி மந்தனா ஏழு ரன்களும், ஷபாலி வர்மா 14 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன் பின் களமிறங்கிய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீட் கவுர் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ஹர்மன்ப்ரீட் கவுர் இதன் மூலம் இந்திய அணி 17.1 ஓவார்களில் 99 ரன்களை எடுத்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க மகளிர் அணியை வீழ்த்தியது. இதன் மூலம் ஆறு போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
சிறப்பாக விளையாடி அணியை வெற்றிபெற செய்த ஹர்மன்ப்ரீட் கவுர்ஆட்டநாயகியாகத் தேர்வு செய்யப்பட்டார். இவ்விரு அணிகளும் மோதும் சிறப்பு டி20 போட்டி நாளை சூரத்தில் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டிக்டாக் வீடியோ எடுக்க பஸ்ஸை நிறுத்தி நடனமாடிய பெண்! #ViralVideo