தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தென் ஆப்பிரிக்காவை ஒயிட்வாஸ் செய்த இந்திய மகளிர் அணி...!

தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.

By

Published : Oct 14, 2019, 9:41 PM IST

INDVSA

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க மகளிர் அணி ஆறு டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில், டி20 தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வென்றது. இதைத் தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கிடையிலான இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியது.

இந்நிலையில், இரு அணிகளுக்கிடையிலான கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும், அணியில் ஹர்மன்ப்ரீத் கவுர், ஷிகா பாண்டே ஆகியோர் பொறுப்பாக விளையாடினாலும் இந்திய அணி 45.5 ஓவர்களில் 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஹர்மன்ப்ரீத் கவுர் 38, ஷிகா பாண்டே 35 ரன்கள் அடித்தனர்.

இந்திய அணியின் பந்துவீச்சில் போல்ட்டான தென் ஆப்பிரிக்க வீராங்கனை

எளிய இலக்கை நோக்கி ஆட வந்த தென் ஆப்பிரிக்க வீராங்கனைகளை, இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக டிஃபெண்ட்(Defend) செய்தனர். அவர்களது மிரட்டலான பந்துவீச்சினை எதிர்கொள்ள முடியாமல் தென் ஆப்பிரிக்க அணி 17.1 ஓவர்களில் 63 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பிறகு கேப்டன் சியின் லூஸ் - மாரிசானே கேப் ஜோடி சிறப்பாக பேட்டிங் செய்து அணியை சரிவிலிருந்து மீட்டது. இந்த ஜோடி 40 ரன்கள் சேர்த்த நிலையில், கேப்டன் சியின் லூஸ் 24 ரன்களில் எக்தா பிஷ்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதுவே ஆட்டத்தின் திருப்புமுனையாகவும் அமைந்தது.

வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் இந்திய அணி

அவரைத் தொடர்ந்து, மாரிசானே கேப் 29 ரன்களில் தீப்தி சர்மாவின் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். இதனால், தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 83 பந்துகளில் 28 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன. இந்நிலையில், சப்னிம் இஸ்மாயில் - நோடுமிசோ ஷான்காசி ஜோடி இந்திய அணியின் பந்துவீச்சை ஓரளவிற்குத் தாக்குப்பிடித்து விளையாடியது. தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 26 பந்துகளில் 10 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், நோடுமிசோ ஷான்காசி எக்தா பிஷ்ட் பந்துவீச்சில் அவுட்டானது ஆட்டத்தின் மற்றொரு திருப்புமுனையாக அமைந்தது.

சப்னிம் இஸ்மாயில் 11 ரன்களுக்கு அவுட்டாக, இறுதியில், தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 48 ஓவர்களில் 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால், இந்திய அணி இப்போட்டியில் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. இந்திய அணி தரப்பில் எக்தா பிஷ்ட் மூன்று விக்கெட்டுகளையும், தீப்தி சர்மா, ராஜேஸ்வரி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் இந்திய மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று தென் ஆப்பிரிக்க அணியை ஒயிட்வாஸ் செய்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details