உலக விளையாட்டின் சிறந்த வீராங்கனைக்கான விருதிற்கு இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் பரிந்துரை செய்யப்பட்டிருந்தார். இந்த பரிந்துரையில் உலகம் முழுவதும் இருந்து 25 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான வாக்கெடுப்பு கடந்த 20 நாள்களாக இணையத்தில் நடந்தது. அதற்கான முடிவு நேற்று அறிவிக்கப்பட்டது.
அதில் மொத்தம் பதிவான 705,610 வாக்குகளில் 199,4777 வாக்குகள் பெற்று இந்திய ஹாக்கி அணியின் ராணி ராம்பால் வெற்றிபெற்றார். இதனால் உலக விளையாட்டின் சிறந்த வீராங்கனை விருதைக் கைப்பற்றிய முதல் ஹாக்கி வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
கடந்த ஆண்டு எஃப்ஐஹெச் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது. அந்தத் தொடரின் சிறந்த வீராங்கனையாக ராணி ராம்பால் தேர்ந்தெடுக்கப்பட்டார். ராணி ராம்பாலின் தலைமையில் இந்திய மகளிர் ஹாக்கி அணி மூன்றாவது முறையாக ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதிபெற்றது.
இந்த விருது வென்றது பற்றி ராணி ராம்பால் பேசுகையில், '' இந்த விருதை எனது நாட்டிற்காக அர்ப்பணிக்கிறேன். இந்த விருதை நான் வெல்வதற்கு மிக முக்கிய காரணம் உலகம் முழுவதும் உள்ள ஹாக்கி ரசிகர்கள் தான். எனது பயிற்சியாளர், நலன் விரும்பிகள், எனது அணி, ஹாக்கி இந்தியா, நண்பர்கள், எனது வாக்களித்தவர்கள் என அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்'' என்றார்.
இது குறித்து உலக ஹாக்கி சம்மேளனம் கூறுகையில், '' இந்தியாவில் பலருக்கும் ராணி ராம்பால் முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார். ராணி ராம்பால் இவ்வளவு வாக்குகளில் விருதை வென்றுள்ளது பெருமையாக உள்ளது. விளையாட்டிற்கு மட்டுமே மக்களை ஒன்றாக இணைக்கும் வல்லமை உள்ளது. நமது நாட்டின் பல்வேறு மூளைகளில் இருந்து வந்து வீரர்கள் ஒரு அணியாக சிறப்பாக ஆடுகின்றனர்'' என தெரிவித்துள்ளது.
சில நாள்களுக்கு முன்னதாக மத்திய அரசு ராணி ராம்பாலுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கி பெருமை சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முதல் நிமிடத்திலேயே கோல்... நெதர்லாந்தை பழிதீர்த்த இந்தியா!