இந்தியா - வங்கதேசம் மகளிர் அணிகளுக்கு இடையே மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் ஆறாவது லீக் போட்டி இன்று பெர்த்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டை இழந்து 142 ரன்களை எடுத்தது.
ஷஃபாலி வர்மா 39, ஜெமிமா ராட்ரிகஸ் 34 ரன்கள் அடித்தனர். வங்கதேச அணி தரப்பில் சல்மா கதுன், பன்னா கோஷ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதைத்தொடர்ந்து, 143 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்துவந்தது.
இருப்பினும், விக்கெட் கீப்பர் நிகர் சுல்தானா அதிரடியாக விளையாடிவந்தார். வங்கதேச அணியின் வெற்றிக்கு 20 பந்துகளில் 37 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், நிகர் சல்தானா 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து, வந்த ஜஹனரா அலாம் 10 ரன்களிலும், ருமானா அகமது 13 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில், வங்கதேச அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 124 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால், இந்திய அணி இப்போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்த தொடரில் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியை போலவே வங்கதேச அணிக்கு எதிரான போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற முக்கிய காரணமாக பூனம் யாதவ் விளங்கினார். அவர் நான்கு ஓவர்களில் 18 ரன்களை மட்டுமே வழங்கி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணி பேட்டிங்கில் குறைந்த ஸ்கோரை அடித்தாலும், பூனம் யாதவின் தனது அபாராமான பந்துவீச்சினால் அணிக்கு வெற்றித் தேடிதருகிறார்.
இப்போட்டியில் 17 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள், நான்கு சிக்சர்கள் என அதிரடியாக 39 ரன்கள் எடுத்த ஷஃபாலி வர்மா ஆட்டநாயகி விருதை பெற்றார். இதைத்தொடர்ந்து, வரும் பிப்ரவரி 27ஆம் தேதி மெல்போர்னில் நடைபெறவுள்ள போட்டியில் இந்தியா நியூசிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இதையும் படிங்க:சூப்பர்மேனாக மாறிய கிரிக்கெட் கடவுளின் தருணம்!